உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் ஸ்ரீநிவாச பத்மாவதி திருக்கல்யாணம்!

கோவையில் ஸ்ரீநிவாச பத்மாவதி திருக்கல்யாணம்!

வடமலை விட்டிறங்கி வந்தாரய்யா பெருமாள்!

கோவை : கோவையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஸ்ரீநிவாச பத்மாவதி திருக்கல்யாண மகோற்சவம் ஆயிரக்கணக்கான பக்தர்களின், "கோவிந்தா கோஷத்துடன் கோலாகலமாக நடந்தது. திருப்பதியில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண மகோற்சவம் நடக்கிறது. இவ்வைபவத்தை நேரில் காண இயலாதவர்களுக்காக, நாட்டின் முக்கிய இடங்களில் உற்சவமூர்த்திகளை எடுத்துச் சென்று, திருக்கல்யாண உற்சவத்தை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் திருச்சி மற்றும் மதுரையில் ஸ்ரீநிவாசர்- பத்மாவதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையடுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம், இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில்,கோவை சுமங்கலி ஜூவல்லர்ஸ், வெங்கடேஸ்வரா இறைபணிக்குழு இணைந்து, ஸ்ரீநிவாச பத்மாவதி திருக்கல்யாண மகோற்சவம் கோவை, "கொடிசியா வளாகம் அருகே நேற்று நடந்தது. மாலை 6.00 மணிக்கு அன்னமாச்சார்யாவின் கீர்த்தனைகளுடன் கல்யாண உற்சவ நிகழ்ச்சி துவங்கியது. ஸ்ரீநிவாச பெருமாள் பச்சைப் பட்டுடுத்தியும், ஸ்ரீதேவி, பூதேவியர் சிவப்புப் பட்டுடனும் எழுந்தருளினர். தொடர்ந்து அங்குரார்ப்பணம், கங்கணம் கட்டுதல், அக்னியை எழுந்தருளச் செய்யல், அதிகாரிகள் சங்கல்பம் நடந்தது. நிகழ்ச்சியின் முக்கிய அங்கத்தில் ஒன்றான மகாஜனங்கள் சங்கல்பம் திதி, நட்சத்திரம் போன்ற பஞ்சாங்க விளக்கங்களுடன் நடத்தப்பட்டது. வேதமந்திரத்தை வேதியர்கள் சொல்ல, மக்கள் திருப்பி உச்சரித்து மணக்கோலத்தில் வீற்றிருக்கும் இறைவனை வேண்டிக் கொண்டனர். ஆகாசராஜன் வழங்கிய நூதன வஸ்திர சமர்ப்பணம் நடந்தது. பின், வேத விற்பன்னர்கள் வேதங்களை முழங்க, மங்கல வாத்தியங்கள் கொட்டி முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை முட்ட, "மாங்கல்யம் தந்துநானேநா ஜகஜீவ நகேதுநாம் என உலக சேமம் வேண்டி, ஸ்ரீநிவாசப் பெருமாள் - பத்மாவதி திருக்கல்யாண மகோற்சவம் நடந்தது. மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சிக்குப் பின், மாலை மாற்றுதல், தேங்காய் உருட்டுதல், பூர்ணாகுதி உள்ளிட்ட சம்பிரதாயங்கள் நிகழ்ந்தன. கும்பதாரம், தீபதாரத்துடன் கல்யாண மகோற்சவம் முழுமையடைந்தது. தேவஸ்தானம் சேர்மன் சத்தியநாராயணா, உறுப்பினர் நாகிரெட்டி, செயல் அலுவலர் சுப்ரமணியம், இணை செயல் அலுவலர்கள் யுவராஜ், ஸ்ரீநிவாசராஜ், இந்து தர்ம பிரசார பரிஷத் செயலாளர் காசிரெட்டி வெங்கட்ரெட்டி உள்ளிட்டோர், தேவஸ்தானம் சார்பில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !