உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரா பவுர்ணமி கலச வேள்வி பூஜை : அடிகளார் துவக்கினார்!

சித்ரா பவுர்ணமி கலச வேள்வி பூஜை : அடிகளார் துவக்கினார்!

மேல்மருவத்துார்; மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி, 1,008 யாக குண்டங்கள் அமைத்து, கலச விளக்கு வேள்வி பூஜை, பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்ரா பவுர்ணமி விழா நேற்று நடைபெற்றது. அதிகாலை 3:00 மணிக்கு, மங்கள இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சித்தர் பீடத்தில், சூலம், ஒற்றை நாகம், இரட்டை நாகம், முக்கோணம், சதுரம், ஐங்கோணம், அறுகோணம் ஆகிய வடிவிலான 1,008 யாக குண்டங்கள் அமைத்து, அவற்றின் மேல், 10,008 கலசங்களும், 10,008 விளக்குகளும், இயற்கை விளை பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. ஆதிபராசக்தி கருவறையின் முன் உள்ள பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த யாக குண்டத்தில், நேற்று காலை, 10:30 மணிக்கு, பங்காரு அடிகளார், கற்பூரம் ஏற்றி, கலச விளக்கு வேள்வி பூஜையை துவக்கி வைத்தார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ராஜேஸ்வரன், முருகேசன் மற்றும் நீதிபதிகள், பல்வேறு துறை அதிகாரிகள் உட்பட ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் கலந்து கொண்டனர். உலக மக்கள் நலனுக்காக நடைபெற்ற இந்த வேள்வி பூஜை, காலை 11:30 மணிக்கு நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் வாசன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !