பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் ஆற்றில் இறங்கல்
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா, மே 2ம் தேதி அனுக்ஞை, வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. மே 3ம் தேதி காலை 8 மணிக்கு திருமஞ்சனம், காப்பு கட்டுதலும்; இரவு 8 மணிக்கு திருவாராதனம் நடந்தது. நேற்று காலை 9:20 மணிக்கு வெள்ளி குதிரை வாகனத்தில் வெண்பட்டு உடுத்தி எழுந்தருளிய பெருமாள், நாட்டரசன்கோட்டை பஸ் ஸ்டாப் அருகே ஆற்றில் இறங்கினார். மாலை 5 மணிக்கு திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு பக்தி உலாத்துதல், இரவு 8 மணிக்கு தசாவதாரம் நடந்தது. இன்று காலை 7 மணிக்கு வெள்ளி கேடயத்தில் புறப்பாடு நடக்கும். காலை 10 முதல் 11 மணிக்குள் மாணிக்கவல்லி விநாயகர் கோயில் அலங்கார கொட்டகையில் எழுந்தருளி, தீர்த்தவாரி நடக்கும். மாலை 6 மணிக்கு தங்க கருடசேவை, இரவு 8 மணிக்கு திருக்கோயில் சேருதல் மற்றும் யாகசாலை ஸம்ப்ரோஷனத்துடன் விழா நிறைவு பெறுகிறது. தேவஸ்தான கண்காணிப்பாளர் கணபதிராமன், கவுரவு கண்காணிப்பாளர் லட்சுமணன், பேரூராட்சி தலைவர் முருகானந்தம் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.