அருவங்காடு முத்துமாரியம்மன் கோவிலில் பூகுண்டம் திருவிழா
குன்னுார் : பழைய அருவங்காடு பகுதியில் உள்ள, அன்னை முத்துமாரியம்மன் கோவிலில், 43வது ஆண்டு திருக்கரகம் மற்றும் பூகுண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. கடந்த, 30ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கிய இந்த விழாவில், கொடியேற்றம் நடந்தது. 1ம் தேதி விநாயகர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், கம்பம் சாட்டுதல், கங்கையில் கரகம் ஜோடனை, ஆர்.சி.லைன் முனீஸ்வரர் கோவிலில் இருந்து புஷ்ப பல்லக்கு, வாண வேடிக்கை, நடன நிகழ்ச்சி ஆகியவை நடந்தன.2ம் தேதி காலை நவக்கிரக பூஜை, அம்மன் அபிஷேக ஆராதனை, உச்சிபூஜை, கஞ்சிவார்த்தல், பிளேக் மாரியம்மன் கோவில், மதுரை வீரன் கோவில், முனீஸ்வரர், அம்மன், விநாயகருக்கு சிறப்பு வழிபாடு, ஆராதனை, முத்து பல்லக்கு ஊர்வலம், குழந்தைகளின் விளக்கு பூஜை, இன்னிசை கச்சேரி ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூகுண்டம் இறங்கினர். மதியம் அன்னதானம் நடந்தது. தொடர்ந்து, மாவிளக்கு பூஜை, இன்னிசை, திருவீதி உலா ஆகியவை நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா, விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.