சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வசந்த உற்சவம் நாளை துவக்கம்
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில், பஞ்ச பிரகார விழா எனப்படும் வசந்த உற்சவம், நாளை (6ம் தேதி) துவங்கி வரும், 20ம் தேதி வரை நடக்கிறது. திருச்சி, சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், வசந்த உற்சவம் எனப்படும், பஞ்ச பிரகார விழா நாளை, (6ம் தேதி) துவங்குகிறது. வரும், 20ம் தேதி வரை நடக்கும் விழாவை முன்னிட்டு, தினசரி காலை, 10 மணிக்கு அம்மன் கேடயத்தில் புறப்பாடு நடக்கிறது. 9வது நாள் அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, ஐந்து பிரகாரங்களிலும் அம்மன் உலா வரும் நிகழ்ச்சி வரும், 15ம் தேதி நடக்கிறது. அன்று காலை, வெள்ளி குடங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு, மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு, 12 மணிக்கு அம்மன் வெள்ளி விமானத்தில் எழுந்தருளி மூலஸ்தானம் கருவறை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்று, தங்க கொடி மரத்தில் இரண்டாவது சுற்று, தங்க ரதம் வலம் வரும் பிரகாரத்தில் மூன்றாவது சுற்று, தெற்கு ரத வீதி வடக்கு மாடவாள வீதியில் நான்காவது சுற்று, கீழ ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதியில் ஐந்தாவது சுற்று என ஐந்து பிரகாரங்களில் வலம் வருகிறார். வரும், 16ம் தேதி முதல், 20ம் தேதி வரை தினசரி இரவு, 10 மணிக்கு அம்மன் தங்க சிம்ம வாகனம், முத்து பல்லக்கு, தங்க கமல வாகனம், வெள்ளி குதிரை வாகனம், வெள்ளி காமதேனு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். விழா ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் தென்னரசு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்கின்றனர்.