உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகத்தீஸ்வரர் - கரிகிருஷ்ண பெருமாள் சந்திப்பு திருவிழா!

அகத்தீஸ்வரர் - கரிகிருஷ்ண பெருமாள் சந்திப்பு திருவிழா!

பொன்னேரி: பிரம்மோற்சவ திருவிழாவில், அகத்தீஸ்வரரும் கரிகிருஷ்ண பெருமாளும் சந்தித்த அரிய நிகழ்ச்சியை காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். பொன்னேரி, திருஆயர்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. ஐந்தாம் நாளான, நேற்று முன்தினம் நள்ளிரவு, பெருமாளும், பொன்னேரி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரரும் ஒருசேர வந்து, பரத்வாஜ சுவாமி சன்னிதி முன்னிலையில், பக்தர்களுக்கு காட்சிதரும் சந்திப்பு திருவிழா, வெகு விமரிசையாக நடந்தது. நள்ளிரவு, 12.00 மணிக்கு துவங்கிய இந்த விழா, அதிகாலை 5.30 மணி வரை நடந்தது. கருட வாகனத்தில் புறப்பட்ட கரிகிருஷ்ண பெருமாள், ஹரிஹரன் பஜார் வீதியின் தேரடி முனையிலும், அதன் முனையில் ஆனந்த வல்லி, சண்டிகேஸ்வரர், விநாயகர், வள்ளி தெய்வானை ஆகியோருடன், காளை வாகனத்தில் அகத்தீஸ்வரர் பெருமானும் வீற்றிருந்தனர். விசேஷ வாத்தியங்களுடன் இருவருக்கும் மாலை, மரியாதைகள் செ<லுத்தப்பட்டன. ஒரே நேரத்தில் சிவாச்சாரியார்களும், பட்டாச்சாரியார்களும் சுவாமிகளுக்கு தீபாராதனை செய்தனர். அதை தொடர்ந்து, கரி கிருஷ்ண பெருமாளும், அகத்தீஸ்வரரும் ஒரே சமயத்தில் எழுந்தருளி பொன்னேரி கோதண்டராமர் சன்னிதியின் முன் வந்து, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அகத்திய, பரத்வாஜ முனிவர்களின் முன்னிலையில் சந்தித்து, காட்சி தந்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தியபடி, கரிகிருஷ்ண பெருமாளும், அகத்தீஸ்வரரும் அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !