ராமானுஜருக்கு குங்குமப்பூ சாற்றும் முறை!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு கோவில் ராமானுஜருக்கு, நேற்று, குங்குமப்பூ சாற்றும்
முறை நடைபெற்றது. சித்திரை உத்திராடம் நட்சத்திரத்திலும், ஐப்பசி ரோகிணி நட்சத்திரம் அன்று ராமானுஜருக்குகுங்குமப்பூ சாற்றும் முறை ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில், ராமானுஜருக்கு தனி கோவில் உள்ளது. நேற்று காலை, மூலவர் ராமானுஜருக்கு, குங்குமப்பூ சாற்றும் முறை நடைபெற்றது. இதனையொட்டி, நேற்று காலை, 9:30 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 10:30 மணியளவில் பசும்பாலில் குங்குமப்பூ கலந்து மூலவர் திருமேனியில் பூசப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய ஆடை அணிவிக்கப்பட்டு மலர் அலங்காரத்தில், ராமானுஜர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து, நண்பகல் 12:00 மணியளவில் ராமானுஜர் 108 அந்தாதியை பக்தர்கள் பாடினர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராமானுஜரை வழிபட்டனர்.