கிரிக்கெட் மைதானமான திருவொற்றியூர் கோவில் குளம்!
திருவொற்றியூர்: போதிய பராமரிப்பு இல்லாததால், திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி கோவில் குளம், கிரிக்கெட் மைதானமாக மாறி வருகிறது. திருவொற்றியூரில், பழமையான தியாகராஜர் சுவாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான குளம், தேரடி வீதியில் அமைந்துள்ளது. பராமரிப்பு இல்லாததால், குளம், தற்போது சிறுவர்கள் விளையாடும் கிரிக்கெட் மைதானமாக மாறிவிட்டது. குளத்தின் படிக்கட்டுகள் உடைந்து கிடைக்கின்றன. சிலர், குளத்தின் அருகே சிறுநீர் கழிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். கோவில் குளத்தை சீரமைத்து பாதுகாக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, பக்தர்கள் கூறுகையில், இரவில், குளத்தின் நடுப்பகுதியில் அமர்ந்து சிலர் குடித்து, கும்மாளம் அடிக்கின்றனர். கோவில் குளப்பகுதிக்கு, இரவில் போலீஸ் ரோந்து சுற்றி வர வேண்டும் என்றனர்.