ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் 25ல் வசந்த உற்சவம்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வரும், 25ம் தேதி முதல் வசந்த உற்சவம் நடக்கிறது. ஜூன், 2ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இந்த ஆண்டு வசந்த உற்சவம் வரும், 25ம் தேதி துவங்கி ஜூன், 2ம் தேதி வரை நடக்கிறது. வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு, தினமும் மாலை, 5 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, 6 மணிக்கு வசந்த மண்டபத்தை வந்தடைவார். இரவு, 8.30 மணி வரை நம்பெருமாள் வசந்த மண்டபத்தில் உபயநாச்சியார்களுடன் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.இதை தொடர்ந்து, 8.30 மணிக்கு அலங்காரமும், அமுதும் செய்விக்கப்பட்டு, நம்பெருமாளுக்கு சூர்ணாபிஷேகம் நடைபெறும். பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு, 9.15 மணிக்கு மூலஸ்தானத்துக்கு சென்றடைகிறார். விழா நிறைவு நாளான ஜூன், 2ம் தேதி மாலை, 5.30 மணிக்கு நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அன்று இரவு, 7 மணிக்கு சந்திரபுஷ்கரணி குளத்தில் தீர்த்தவாரி கண்டருள்கிறார். பின்னர் வசந்த மண்டபத்தில் நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருள்கிறார். இரவு, 11.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைகிறார். விழா ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்கின்றனர்.