கருப்பராயசாமி கோவில் தேர் வெள்ளோட்டம்
அன்னுார் : குப்பனுார் கருப்பராயசாமி கோவில் தேர் வெள்ளோட்டம், ஜூன் 16ம் தேதி நடக்கிறது. குப்பனுார் கைகாட்டியில் பிரசித்தி பெற்ற கருப்பராய கலாமணிசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர். அரசு போக்குவரத்து கழக சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. திங்கள், வெள்ளிதோறும் அருள்வாக்கு கூறப்படுகிறது.இக்கோவிலில் கருப்பராய சாமிக்கு, 22 அடி உயரத்திலும், விநாயகருக்கு, 11 அடி உயரத்திலும் தேர் செய்யப்படுகிறது. வேங்கை மரத்திலான தேர் செய்யும் பணி ஆறு மாதங்களாக நடந்து, முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து, தேர் வெள்ளோட்டம் அடுத்த அமாவாசை நாளான ஜூன் 16ல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, பக்தர்கள் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் அமாவாசையை முன்னிட்டு, கருப்பராயசாமி, மாசாணியம்மன் மற்றும் வேலுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அருள்வாக்கு கூறப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.