பக்தர்கள் வசதிக்காக திருத்தணி முருகன் கோவிலில் புதிய படிகள்!
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில் பக்தர்கள் நெரிசலை தவிர்க்கவும், கல்காரம் தீர்த்தகுளத்திற்கு பக்தர்கள் செல்வதற்கு வசதியாக, 15 லட்சம் ரூபாய் செலவில், புதிய படிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். மாதந்தோறும் வரும் கிருத்திகை, ஆடிக்கிருத்திகை, பிரம்மோற்சவம், திருப்படித் திருவிழா போன்ற முக்கிய விழா நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வருவதால் மாடவீதியில் பக்தர்கள் நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பக்தர்கள் படிகள் வழியாக இறங்கும்போதும் நெரிசல் ஏற்படுகிறது. இதுதவிர, பக்தர்கள் கல்கார தீர்த்தக்குளத்திற்கு செல்வதற்கு வசதியில்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், பக்தர்கள் வசதிக்காக, கோவில் நிர்வாகம், மலைக்கோவிலில் இருந்து கல்கார தீர்த்தக்குளம் செல்வதற்கு புதிய படிகள் அமைப்பதற்கு முடிவு செய்து, 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள், கடந்த மாதம் டெண்டர் விடப்பட்டு, துரித வேகத்தில் நடந்து வருகிறது.
இதுகுறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாடவீதியில் ஏற்படும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், வாகனங்களில் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காகவும், இந்த புதியப்படிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள், தற்போது, 80 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. இம் மாதம் இறுதிக்குள் அல்லது, அடுத்த மாதம், முதல் வாரத்தில், புதிய படிகள் அமைக்கும் பணி முடிந்து, பக்தர்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.