கோவில்களுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு!
கடலூர்: இந்து சமய அறநிலையத் துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக கோவில்களுக்கு வரவேண்டிய வாடகை மற்றும் வரி வசூல் பணி தேக்கமடைந்துள்ளதால், வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் ஆன்மிகத்தை வளர்க்கும் பொருட்டு கலை நயமிக்க கோவில்கள் பல கட்டினர். இந்த கோவில்களில் தினசரி பூஜை, ஆண்டிற்கு ஒரு முறை திருவிழா மற்றும் கோவிலை தொடர்ந்து பராமரித்திட வசதியாக நிலம், வீடு, வணிக வளாகங்கள் கோவிலுக்கு எழுதி வைத்துள்ளனர். þசுதந்திரத்திற்கு பின்னர் கோவில்கள் அனைத்தும் இந்து அறநிலையத் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டிற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக வருவாய் உள்ள பட்டியலை சாராத கோவில்களை இந்து அறநிலையத் துறை துணை ஆணையரும், அதற்கு மேல் வருவாய் வரும் பட்டியலைச் சேர்ந்த கோவில்கள் அறநிலையத் துறை இணை ஆணையரும் பராமரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில், பட்டியல் இனத்தில் 168 கோவில்கள், பட்டியல் சாரா இனத்தில் 1,283 கோவில்கள் என மொத்தம் 1,451 கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் பட்டியல் சார்ந்த கோவில்களை நிர்வகித்திட 23 செயல் அலுவலர்களும், பட்டியல் சாரா கோவில்களை நிர்வகித்திட தாலுகாவிற்கு ஒரு ஆய்வாளர் என பழைய கணக்குப்படி (கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம்) 6 ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன. அதன்படி மாவட்டத்தில் பட்டியல் இனத்தில் உள்ள 168 கோவில்களில் 4 முதல் நிலை (ஆண்டு வருமானம் 50 லட்சம் ரூபாய்), மூன்று கோவில்கள் இரண்டாம் நிலை (25 லட்சம் ரூபாய்), 8 கோவில்கள் மூன்றாம் நிலை (10 லட்சம் ரூபாய்), 8 கோவில்கள் நான்காம் நிலை (5 லட்சம் ரூபாய்) அதில், 23 செயல் அலுவலர் பணியிடங்களில் தற்போது 7 பேர் மட்டுமே உள்ளனர். இவர்கள் மீதமுள்ள 16 செயல் அலுவலர்களின் பணிகளைக் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர். அதாவது ஒவ்வொரு செயல் அலுவலரும் 3 பிரதான கோவில்களையும், அதனுடன் இணைந்த 7 முதல் 10 கோவில்களையும் நிர்வகித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருவதால், பிரதான கோவில்களுக்குச் சொந்தமான கட்டடங்கள், கடைகள், வீடுகள், நிலங்களை அனுபவித்து வருபவர்களிடம் இருந்து வாடகை மற்றும் குத்தகை தொகை வசூலிக்கும் பணி பெருமளவில் தேக்கமடைந்துள்ளதால், ஒவ்வொரு கோவில்களுக்கும் பல லட்சம் ரூபாய் வருவாய் பாதித்துள்ளது.
இந்த நிலுவைத் தொகை அதிகரித்து வருவதால், கோவில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும், பல கோவில்களை நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தவிர்த்திட கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு கோவிலுக்கும் வர வேண்டிய வாடகை மற்றும் குத்தகை தொகை வசூலிக்கும் பணியை அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்காக ஒரு கோவிலில் வசூல் பணியை மேற்கொள்ளும் போது அருகாமை கோவில்களில் உள்ள ஊழியர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் இணைந்து "வாடகை செலுத்தாத கடைகளை "சீல் வைக்கும் பணியை செய்து வருகின்றனர். அறநிலையத் துறையின் அதிரடியால் வாடகைதாரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய தொகையில் ஒரு பகுதியை செலுத்தி, கால அவகாசம் கேட்டு "சீல் நடவடிக்கையை தவிர்த்து விடுகின்றனர். இதனால், கோவிலுக்கு வர வேண்டிய வருவாய் இழப்பு தொடர்கதையாகவே உள்ளது. இந்நிலையைத் தவிர்த்து வாடகை மற்றும் குத்தகைத்தொகையை மாதந் தோறும் வசூலித்திட வசதியாக காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.