உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மசிரிமாரியம்மன் கோவிலில் குண்டம்: ஏராளமான பக்தர்கள் பூ மிதித்து நேர்த்தி

மசிரிமாரியம்மன் கோவிலில் குண்டம்: ஏராளமான பக்தர்கள் பூ மிதித்து நேர்த்தி

கோபி : கோபி புகழேந்தி வீதி மசிரிமாரியம்மன் கோவில், குண்டம் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கோபி வீரபாண்டி கிராமம், புகழேந்தி வீதியில் உள்ள, மசிரி மாரியம்மன், கருப்பண்ணஸ்வாமி கோவில் குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா, கடந்த, 7ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது.கடந்த, 13ம் தேதி கம்பம் நடப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 8 மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு, 7 மணிக்கு பட்டுப்போர்த்தி ஆடுதல், கரகம் ஆடுதல், இரவு, 9 மணிக்கு பொங்கல் வைத்தல் நடந்தது.நேற்று முன்தினம் இரவு, 12 மணிக்கு கோவில் எதிரே உள்ள, 9 அடி குண்டத்தில், 4.5 டன் ஊஞ்ச மரக்கட்டைகள் அடுக்கி, நெருப்பு மூட்டினர்.குண்டம் இறங்கும் நிகழ்ச்சிக்காக, நேற்று அதிகாலை முதல், கோபி, பச்சமலை, பதி, மொடச்சூர், நாதிபாளையம், வாய்க்கால் ரோடு போன்ற பகுதியில் இருந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவில் முன் குவிந்தனர்.காலை, 8.30 மணிக்கு திருக்கொடி கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. தலைமை பூசாரி கவுரிசங்கர், குண்டத்துக்கு கற்பூர தீபம் காண்பித்து, சிறப்பு பூஜை செய்தார். பூசாரி, தனது இரு கரங்களால், குண்டத்தில் உள்ள நெருப்பை எடுத்து, வானத்தை நோக்கி, மூன்று முறை இறைத்தார். அதன் பின், பூக்கள், கனி, பழம், எழுமிச்சை கனிகளை வானத்தை நோக்கி வீசினார். கூடியிருந்த பக்தர்கள், அதை லாவகமாக பிடித்தனர். பூ, பழம், கனி, தங்கள் கையில் கிடைப்பதை அதிர்ஷ்டமாக பக்தர்கள் நினைப்பர்.தலைமை பூசாரி குண்டம் இறங்கியதும், பிற பூசாரிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், குண்டம் இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். கோவில் வளாகமே, பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மசிரிமாரியம்மன் சிம்ம வாகனத்தில் தத்ரூபமாக காட்சியளித்தார். அதன்பின், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !