கொங்கரத்தி பெருமாள் கோயில் மே 29ல் கும்பாபிஷேகம்: இன்று யாகசாலை பூஜை
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகேயுள்ள கொங்கரத்தியில் வண்புகழ் நாராயணப்பெருமாள் கோயிலில் மே 29ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இன்று காலை யாகசாலை பூஜை துவங்குகிறது. இக்கோயிலில் பூமிநீளா சமேதராய் பெருமாள் எழுந்தருளியுள்ளார். மூலவர் விமானம், பரிவார தேவதைகள், வண்புகழ் விநாயகர் கோயில் திருப்பணி நடைபெற்றுள்ளது. யாகசாலை பூஜை இன்று காலை 9 மணிக்கு துவங்குகிறது. மாலையில் கலச ஸ்தாபனம், இரவில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெறும். நாளை காலை 8 மணிக்கு சிறப்பு ஹோமம் மதியம் 12.30 மணிக்கு பூர்ணாகுதி சாற்று முறை கோஷ்டி, மாலை 3 மணிக்கு மகாசாந்தி பூர்ணாகுதி சிறப்பு திருமஞ்சனம் நீராட்டசேவை, 6 மணிக்கு சிறப்பு ஹோமம் நடைபெறும். மே 29ல் காலை 6 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 8.36 மணிக்கு மேல் கும்பாபிஷேகம், மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம், இரவில் திருவீதி உலா நடைபெறும். ஏற்பாட்டினை பரம்பரை அர்ச்சகர்கள், டிரஸ்டிகள், கிராமத்தினர் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்கின்றனர்.