உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா; போக்குவரத்தில் மாற்றம்!

மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா; போக்குவரத்தில் மாற்றம்!

கோவை : மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று காலை மாநகரில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்பணக்காரவீதி, வைசியாள் வீதி சந்திப்பில் மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடக்கிறது. இதையடுத்து, போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை, 5.00 முதல் 10.00 மணி வரை நடக்கிறது. இதையடுத்து, அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்திலிருந்து கூட்செட் ரோடு வழியாக வரும் அனைத்து வாகனங்களும் பெரியகடைவீதி, டவுன்ஹால், போத்தீஸ் பாயின்ட், ஒப்பணக்கார வீதி வழியாக சுக்கிரவார்பேட்டை சந்திப்பை அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். திருச்சி ரோடு மற்றும் அவிநாசி ரோட்டிலிருந்து பேரூர் செல்லும் அனைத்து வாகனங்களும் பெரியகடைவீதி, டவுன்ஹால் சென்று வைசியாள் வீதி வழியாக செல்லாமல் என்.எச்., ரோடு வழியாக உக்கடத்தை அடைந்து, உக்கடம் - பேரூர் பைபாஸ் வழியாக செல்ல வேண்டும்.

பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் உக்கடத்தை அடைந்து நேராக ஒப்பணக்கார வீதிக்குள் செல்லாமல், வாலாங்குளம் பைபாஸ் மற்றும் உக்கடம் பேரூர் பைபாஸ் ரோட்டில் செல்ல வேண்டும்.மேட்டுப்பாளையம் ரோடு, சுக்கரவார்பேட்டை, பூமார்க்கெட் மற்றும் புரூக்பாண்ட் ரோட்டிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் வழக்கம்போல் என்.எச்., ரோடு வழியாக உக்கடம் அடைந்து, வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

பேரூர் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் வைசியாள் வீதிக்குள் செல்லாமல், சலீவன் வீதி வழியாக சென்று ராஜவீதி வழியாக ஒப்பணக்காரவீதியை (லாலா கார்னர்) அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.லாரிப்போக்குவரத்து தற்போது நடைமுறையில் உள்ளதுபோல், காலை, 8.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 முதல் இரவு 8.00 மணி வரையிலும் நகருக்குள் நுழைய தொடர்ந்து தடை உள்ளது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !