உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லை மாரியம்மன் கோவில் விழா; ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

எல்லை மாரியம்மன் கோவில் விழா; ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

ராசிபுரம் : ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர், குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம், குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 18ம் தேதி துவங்கியது. தொடர்ந்து ஸ்வாமிக்கு, சிறப்பு அபிஷேகம், அம்மன் திருவீதி உலா வருதல், திருக்கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.

மேலும், தீர்த்தவாரி, பூந்தட்டு ஊர்வலம், பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், அம்மை அழைத்தல், சக்தி அழைத்தல், பொங்கல் வைத்தல் மற்றும் விளையாட்டு போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.ராசிபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், செல்லியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், பூங்கரகம், அக்னி சட்டி எடுத்தும், விமான அலகு குத்தியும் அம்மனுக்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். நேற்று காலை, 8 மணிக்கு, சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், புனித நீராடி ஊர்வலமாக வந்து கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று (மே, 29) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், திருவிளக்கு பூஜை, மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் சத்தாபரணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து, நாளை (மே, 30) அதிகாலை, 2 மணிக்கு கம்பம் பிடுங்குதல், சிறப்பு அபிஷேகம், மறு பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !