உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிவாசிகள் பாரம்பரிய நடனம் வனதேவதை கோவில் திருவிழா!

ஆதிவாசிகள் பாரம்பரிய நடனம் வனதேவதை கோவில் திருவிழா!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, வனதேவதை கோவில் திருவிழாவில், ஆதிவாசி மக்கள், பாரம்பரிய நடனமாடி ஸ்வாமியை வழிபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கொல்லப்பள்ளி, பெரியமலை வனப்பகுதியில், வனதேவதை, வனமுனி அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில், அருள் பாலித்து வரும் வனதேவதையை, ஆதிவாசி இருளர் இன மக்கள், தங்களுடைய காவல் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

அதன்படி, இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம், 15ம் தேதி, வனதேவதை கோவிலில், கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், கையில் கங்கணம் மற்றும் காப்புக்கட்டி, பச்சை வண்ண ஆடை மற்றும் பச்சை வண்ண மாலை அணிந்து, விரதம் இருந்தனர். தொடர்ந்து, வனதேவதை அம்மனை, தாய் வீட்டுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

கடந்த, 25ம் தேதி, காட்டுக்கு வேட்டைக்குச் சென்று, வழிபாட்டுக்கு தேவையான தேன், கிழங்கு, திணை, காட்டு மல்லி, கொண்டை பூ உள்ளிட்ட பல மலர்களை சேகரித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், தாய் வீட்டார் சீர்வரிசை, பெரியமலை வனதேவதை கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு, சம்மந்தி வீட்டாரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து, நேற்று தாய்வீட்டு கரகம் எடுத்தல் போன்ற நிகழ்ச்சி நடந்தது. கோவில் பூசாரி இருளமுத்து, போச்சம்பள்ளி அருகே உள்ள அத்திக்குட்டை இருளர் காலனியில் இருந்து, கரகம் எடுத்து வந்தார். அப்போது, நேர்த்திக் கடனாக, பக்தர்கள் தரையில் படுத்திருந்தனர்.
அவர்கள் மீது நடந்து சென்று, பூசாரி கரகத்தை சுமந்து வந்தார். இந்த கரகம் கோவிலை வந்தடைந்ததும், வழிபாடு தொடங்கியது. அதன்பின், வனப்பகுதியில் சேகரிக்கப்பட்ட தேன், இருளகிழங்கு மற்றும் பூக்களை கொண்டு பூஜை நடத்தினர். முதலில், வனமுனி அய்யனாருக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து, வனதேவதைக்கு பூக்களால் அலங்காரம் செய்து, இருளகிழங்கில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

அப்போது, 25க்கும் மேற்பட்ட ஆடுகளும், 100க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளும் பலியிடப்பட்டன. அங்கிருந்த பக்தர்கள் சிலர், பலியிடப்பட்ட ஆடுகளின் ரத்தத்தை, ஆவேசத்துடன் குடித்தனர். மேலும், தங்களது பாரம்பரிய இசையுடன், நடனமாடி வனதேவதையை வழிபட்டனர். விழாவில், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களிலிருந்து, ஏராளமான ஆதிவாசி மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !