தீமிதி திருவிழாக்கள் கண்ணகி வழிபாடே!
நங்கநல்லுார்: தமிழகம், கேரளாவில் அம்மன் கோவில்களில் நடைபெறும் தீமிதி திருவிழாக்கள், கண்ணகி வழிபாடாகும் என, முகிலை ராசபாண்டியன் பேசினார். நங்கநல்லுார், பாரதி கலைக்கழகம் சார்பில், சிலப்பதிகார விழா நேற்று முன்தினம் நடந்தது. அதில், சிலப்பதிகாரத்தில், நெஞ்சை அள்ளுவது புகார் காண்டமே, மதுரை காண்டமே, வஞ்சி காண்டமே என்ற தலைப்பில், கவிஞர் ராசேந்திரபாபு, புலவர் துரை ஜெயராமன், முனைவர் முகிலை ராசபாண்டியன் ஆகியோர் பேசினர்.
புறஞ்சேரியை..: வஞ்சி காண்டமே என்ற தலைப்பில், முகிலை ராசபாண்டியன் பேசியதாவது: பூம்புகாரில், மாதவிக்கும், கோவலனுக்கும் நடந்த கானல் வரிப்பாடலால் பிரிவு ஏற்பட்டது. கண்ணகியுடன் வாழத் துவங்கிய கோவலன், பூம்புகாரில் இருந்து காவிரி கரை ஓரமாகவே வந்து, திருவரங்கத்தில் கரை கடந்து, உறையூர், புதுக்கோட்டை, வழியாக, மதுரையின் புறஞ்சேரியை அடைகின்றனர். கண்ணகியின் காற்சிலம்பை விற்க, கோவலன் மதுரைக்கு செல்கிறான். அங்கு, ஏற்கனவே பாண்டிய அரசி கோப்பெருந்தேவியின் காற்சிலம்பை திருடிய பொற்கொல்லன், அதை வாங்கிக்கொண்டு அரண்மனைக்கு விரைகிறான். அங்கு, மனைவியை சமாதானப்படுத்த, அந்தப்புரத்திற்கு செல்லும் மன்னனை வழிமறித்து, செய்தியை சொல்கிறான். ஏற்கனவே மனநிலை சரியில்லாத மன்னன், திருடன் எனக் கேட்டதும், அவனை கொன்று, பொருளை கொண்டுவர சொல்கிறான்.
மதுரையை.: வழக்குக்கான தீர்ப்பை, நீதிமன்றத்தில் எழுதப்படாவிட்டால், இப்படித் தான் சரியில்லாத தீர்ப்பாக வெளிவரும் என்பதற்கான சாட்சி, இந்த காட்சி. பின், கோவலன் கொலை செய்யப்படுகிறான். கண்ணகி துடிக்கிறாள்; வழக்குரைத்து, மாணிக்கப்பரல்களை காட்டி, நெடுஞ்செழியனை நாணி, உயிர்விடச் செய்கிறாள்; உடன், தவறுணர்ந்த கோப்பெருந்தேவியும் உயிர் துறக்கிறாள். மேலும், கோபம் குறையாத கண்ணகி, தீத்திறம் வாய்ந்தோர் பக்கமாக தீயை திருப்பி, மதுரையை எரிக்கிறாள். பின், மதுரையை எரித்துவிட்ட குற்ற உணர்வோடும், கணவனை பிரிந்த பின், என்ன செய்வதென்று தெரியாமல், வைகை கரையோரமாகவே நடந்து, அது தோன்றும் மலையில் ஏறுகிறாள். வரைவாய்தல் என்னும் வழக்கப்படி, மலையிலிருந்து குதித்து உயிர்விட்டு, விண்ணுலகம் செல்கிறாள். சிலை எடுக்கிறான் இப்படிப்பட்ட கற்புக்கரசியான கண்ணகியே, தமிழக மக்களுக்கு, அம்மனாக தெரிகிறாள். கதைகேட்ட செங்குட்டுவனுக்கும், அவ்வாறே தெரிகிறாள். இமயத்தை வென்று, கனகன், விசயன் தலையில் கல் சுமத்தி, கங்கையில் நீராட்டி, அதை, சேர நாட்டுக்கு கொணர்ந்து, கண்ணகிக்கு சிலை எடுக்கிறான் செங்குட்டுவன்.
தீத்திறம் வாய்ந்தோர் பக்கம் சேர்க என்று, கண்ணகி தீக்கு கட்டளை இட்டதால், நல்லோர் பிழைத்தனர். எனவே, நல்வழி கிடைக்க, நல்லெண்ணத்துடன், கண்ணகியை அம்மனாக வணங்கி, தானே வலியச் சென்று, தீமிதிக்கும் வழக்கம், தமிழர்களிடம், கண்ணகி வழிபாட்டால் வந்ததே! வெம்மை தாங்காத மக்கள், கண்ணகி விழாவெடுத்து, தீமிதித்தால், மனம் குளிரும்; கற்புடை அம்மன், மழையாக பொழியச் செய்வாள். அதனாலேயே, அம்மனுக்கு, மாரி அம்மன் என்னும் பெயரும் வழங்கலாயிற்று. கேரள பகவதி அம்மன் கோவிலிலும், இதே வழக்கம் உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். விழாவில், கோ.பார்த்தசாரதி, குமரி செழியன், லிங்கராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.