உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதாரண்யேஸ்வரர் கோவில் திருப்பணி துவக்கவிழா

வேதாரண்யேஸ்வரர் கோவில் திருப்பணி துவக்கவிழா

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோவில் திருப்பணி துவக்க விழா, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் முன்னிலையில் நடந்தது. கடந்த, 2000ம் ஆண்டில், வேதாரண்யேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது. அதன் பின், இந்த ஆண்டு, அந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. மேல் கோபுரம் மட்டும் அறநிலையத்துறை சார்பில், 16 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கோவில் திருப்பணிகளை விரைவில் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கோவில் கீழக்கோபுரம் திருப்பணி செய்வதற்கான கால்கோல் விழா நடந்தது. தொடர்ந்து, அரசு நிதி, 10 லட்சம், உபயதாரர்கள் நன்கொடை உட்பட, 39 லட்சத்தில், வேதாரண்யேஸ்வரர் கோவில் தேர் செய்வதை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்

பின்னர் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. தேர் செய்வதற்கான முதல் தவணை தொகையை, அமைச்சர் ஜெயபால், தேர்பணி ஒப்பந்ததாரரிடம் வழங்கினார். கூட்டத்தில் நாகை தொகுதி எம்.பி., கோபால், வேதாரண்யம் எம்.எல்.ஏ., காமராஜ், அறநிலையத்துறை உதவி ஆணையர் ரெத்தினவேல், தாசில்தார் சாந்தி, செயல் அலுவலர் மணவழகன், கோவில் மேலாளர் பழனிவேல், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் சண்முகராசு, ஒன்றிய செயலாளர் சிவானந்தம், துணைச் செயலாளர் சரவணன், நகர செயலாளர் எழிலரசு மற்றும் திருப்பணி உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !