அழகர்கோவிலில் தயாராகுது புதிய தேர்: ஆடியில் தேரோட்டம்!
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உபயதாரர் வழங்கிய ரூ.90 லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணிகள் முடிந்து விட்டதால் ஆனியில் வெள்ளோட்டமும், ஆடியில் தேரோட்டமும் நடக்கிறது. இக்கோயில் ஆடித் தேரோட்டம் தனிச்சிறப்பு பெற்றது. தற்போதுள்ள தேர் 300 ஆண்டுகள் பழமையானது. மலைப் பாதையில் ஆடி, அசைந்து ஓடியதில், தேரில் இருந்த பல சிற்பங்கள் சிதைந்து விட்டன. தேரும் ஆட்டம் கண்டு விட்டது. தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி வரதராஜன் ஆகியோரின் முயற்சியால் மதுரை பக்தர் ஒருவர் ரூ.90 லட்சத்தில் புதிய தேர் செய்து கொடுக்க முன்வந்தார். பணிகள் துவங்கப்பட்டு, தேர் செய்வதற்கான தேக்கு, வேங்கை மரங்கள் மியான்மர் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. பொன்னமராவதி ஸ்தபதி செல்வம் தலைமையில் 15 பேர், தேர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேரில் பெருமாளின் பல்வேறு அவதாரங்கள் மற்றும் மாதவன், கேசவன், ரதி, மன்மதன், மன்னர் திருமலை நாயக்கர், பூதங்கள், கஜேந்திர மோட்சம், சிற்பங்கள் செதுக்கப் படுகின்றன. ஸ்தபதி செல்வம் கூறியதாவது: புதிய தேர் 5 நிலைகள் கொண்டவை. ஒவ்வொரு நிலையின் கீழ் பகுதியில் 124, மேலே 62 சிற்பங்கள் என 500க்கும் மேற்பட்ட சிற்பங்கள் பொருத்தப்படுகின்றன. சிற்பங்கள் அனைத்தும் பெருமாளின் அவதாரங்களையும், கோயிலில் நடைபெறும் தி ருவிழாக்களையும் மையமாக வைத்து நுணுக்கமாக கை வேலைப்பாடுகளால் செய்யப்பட்டுள்ளன என்றார். கோயில் நிர்வாகம் தரப்பில் கூறிய தாவது: 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன. சக்கரங்கள் மட்டும் பழைய தேரில் இருந்த ஹைட்ராலிக் சக்கரங்களை வைத்துள்ளோம். ஆனியில் வெள்ளோட்டம் விட அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். வெள்ளோட்டம் முடிந்ததும் ஆடியில் புதிய தேரோட்டம் நடக்கும். கண்ணாடி கூண்டில் பழைய தேரை பக்தர்கள் பார்க்கும் வகையில் பாதுகாக்கப்படும் என்றனர்.