உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் துவங்கியது!

அழகர்கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் துவங்கியது!

அழகர்கோவில் : அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் நேற்று துவங்கியது. "நான்கு வண்ண பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே கோயில் மேல் தளம் செல்ல அனுமதிக்கப்படுவர் என, கோயில் தக்கார் சுதர்ஷன் தெரிவித்தார். இக்கோயில் கும்பாபிஷேகப் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து ஜூலை 10ல் கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு @மல், முதல் கால பூஜையுடன் துவங்கியது. யஜமானர் அனுக்ஞை, ஆச்சார்ய அனுக்ஞை, புண்யாகவாசனம், அங்குரார்பணம், வாஸ்துசாந்தி, திவ்யபிரபந்தம் துவக்கம், பூர்ணாஹூதி சாற்றுமுறை நடந்தது. இன்று காலை ஏழு மணிக்கு சுப்ரபாதம், விஸ்வரூபம், கும்ப ஆராதனமும், காலை ஒன்பது மணிக்கு அக்னி ஆராதனம், மஹாசாந்தி ஹோமத்துடன் இரண்டாம் கால பூஜை நடக்கிறது. மாலை ஐந்து மணிக்கு மூன்றாம் கால பூஜையும், ஜூலை 8ம் தேதி நான்கு, ஐந்தாம் கால பூஜையும், மறுநாள் ஆறு, ஏழாம் கால பூஜையும் நடக்கிறது. ஜூலை 10ம் தேதி காலை ஐந்து மணிக்கு விஸ்வரூபம், பண்யாகவாசனம், யுக்த ஹோமம், யாத்ரா தானம், கும்ப உத்தாபனம் நடக்கிறது. காலை 9.03 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் சுக்லதசமி, சுவாதி நட்சத்திரத்தில் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. பின் 9.30 மணிக்கு திவ்யபிரபந்தம் சாற்றுமுறையும், காலை 11 மணிக்கு சர்வ தரிசனமும் நடக்கிறது. அன்று மாலை கருட வாகனத்தில் புறப்படும் சுந்தரராஜ பெருமாள் கோயிலை வலம் வருகிறார். கும்பாபிஷேகம் காண வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோயில் சார்பில் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி கோயில் தக்கார் சுதர்ஷன் கூறியதாவது: கோயில் நிதியில் இருந்து நான்கு கோடி, உபயதாரர்கள் நிதி 3.36 கோடி ரூபாய் மதிப்பில் கும்பாபிஷேகப் பணிகள் முடிந்துள்ளது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், 10 இடங்களில் நிரந்தர கழிப்பறை மற்றும் நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பஸ், மருத்துவம், ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. முக்கிய பிரமுகர்கள், பக்தர்களுக்கு மஞ்சள், நீளம், பச்சை, ரோஸ் ஆகிய நான்கு வண்ணங்களில் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. தரை தளத்திற்கு 1000, மேல் தளத்திற்கு 4000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மஞ்சள், நீளம் வண்ண பாஸ் வைத்திருப்பவர்கள் மலை கேட் ராயகோபுரம் வழியாகவும், பச்சை வண்ண பாஸ் வைத்திருப்பவர்கள் பெரியவாய்ச்சான் வாயில் வழியாகவும் மேல் தளம் செல்ல அனுமதிக்கப்படுவர். ரோஸ் வண்ண பாஸ் வைத்திருப்பவர்கள் பெரியவாய்ச்சான் வாயில் வழியாக தரைதளத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர், என தெரிவித்தார். பக்தர்களுக்கு இன்சூரன்ஸ் : கும்பாபிஷேகம் காண வரும் பக்தர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எதிர்பாராத வகையில் விபத்து நேர்ந்தால் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படும் வகையில் 100 பேருக்கு தலா ஒரு லட்சம் வீதம், ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !