உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செப்பறை அழகியகூத்தர் கோயிலில் ஆனித்தேரோட்ட விழா கோலாகலம்

செப்பறை அழகியகூத்தர் கோயிலில் ஆனித்தேரோட்ட விழா கோலாகலம்

திருநெல்வேலி : ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோயிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. பஞ்சசபைகளில் தாமிரசபையான செப்பறை திருத்தலத்தில் சிதம்பரம் கோயிலை போல ஆண்டுதோறும் ஆனிஉத்திர திருமஞ்சன விழா நடக்கும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 28ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், நடன தீபாராதனை, நெல்லையப்பர், காந்திமதிஅம்பாள் உட்பிரகார வீதியுலா நடந்தது. ஏழாம் திருநாளில் உருகுசட்டசேவை, சிவப்புசாத்தி தரிசனம், எட்டாம் திருநாளில் வெள்ளைசாத்தி, பச்சைசாத்தி தரிசனம் நடந்தது. ஒன்பதாம் திருநாளான நேற்று காலை கோயிலில் கும்பபூஜை, சுவாமிக்கு மகா அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் அழகியகூத்தர் அம்பாளுடன் தேரில் எழுந்தருளினார். மதியம் 11.30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. "அரஹர மகாதேவா... தென்னாடுடைய சிவனே போற்றி பக்தி கோஷங்களை முழங்கியபடி பக்தர்கள் உற்சாகத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோயிலை சுற்றி தேர் வலம் வந்தது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஒரு மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. பின்னர் கோயிலில் அன்னதானம் நடந்தது.

ஆனிஉத்திர திருமஞ்சனம் : ஆனிஉத்திர திருமஞ்சனம் இன்று நடக்கிறது. காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், மதியம் ஒரு மணிக்கு நடன தீபாராதனை, சுவாமி வீதியுலா, இரவு 7 மணிக்கு பிற்கால அபிஷேகங்கள், 8 மணிக்கு அலங்கார தீபாராதனை, அழகியகூத்தர் தாமிரசபைக்கு எழுந்தருளல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் கசன்காத்தபெருமாள், அறங்காவலர் குழுத்தலைவர் மாயாண்டி, உறுப்பினர்கள் சுடலைமுத்து, பார்வதிஅம்மாள், கட்டளைதாரர்கள், பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !