ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா!
தர்மபுரி : தர்மபுரி எஸ்.வி., ரோட்டில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.
நேற்று முன்தினம், யாகசாலை பிரவேசம், கணபதி பூஜை, கும்பாபிஷேக அங்க ஹோமங்கள், வாஸ்து ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று, காலை, 6 மணிக்கு விஷ்ணு காயத்திரி ஹோமம், ஸ்ரீ ராம தாரக மந்திர ஹோமம், ஸ்ரீ லட்சுமி நரச்சிம்ம ஹோமம், மஹா சுதர்ஷ்ண ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ ஹரிவாயு ஸ்துதி ஹோமம் நடந்தது. காலை, 9 மணிக்கு மேல், 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது.தம்பள்ளி, மாதவதீர்த்த மடாதீஸர், 108 ஸ்ரீ வித்யாஸாகர மாதவ தீர்த்த ஸ்ரீ பாதங்கள் தலைமை வகித்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து, பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். கும்பாபிஷேகத்துக்கு, முன் கருட பகவான், வானில், கோவிலை சுற்றி வலம் வந்த போது, பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என, பக்தி கோஷம் எழுப்பினர்.
ஆஞ்சநேயருக்கு, பக்தர்களால் வழங்கப்பட்ட வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. வெள்ளி கவச அலங்காரத்தில், ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம், 12 மணி முதல், இரவு வரை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை, 6 மணிக்கு அர்ச்சனை, மங்களஹாரத்தியும், 6.30 மணிக்கு அருள் தரும் ஆஞ்சநேயர் என்னும் தலைப்பில் பக்தி சொற்பொழிவும் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் ஆச்சார் சத்தியநாராயணன், குருக்கள் வாசுதேவன் மற்றும் விழாக் குழுவினர் குருசாமி, கிருஷ்ணன், பாரத் வைத்திலிங்கம், சம்பத்குமார், கண்ணன், சிவராஜ், ஆனந்த், பாலாஜி, கேசவன், ராகவேந்திரன்,ஸ்ரீகாந்த், ஆகியோர் செய்திருந்தனர். இன்று முதல், 48 நாட்களுக்கு, மண்டல பூஜை நடக்கிறது.