கோயிலில் ரசீது தராமல் சிறப்பு கட்டண வசூல்!
சின்னமனூர்:குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ரசீது வழங்காமல் சிறப்பு தரிசன கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குச்சனூரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. சுயம்பு மூலவரை தரிசிக்க மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும், வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வந்து செல்கின்றனர். வெளியூர் பக்தர்கள் வரும் வாகனங்களுக்கு "பார்க்கிங் வசதி ஏற்படுத்தாததால் ரோட்டின் இருபுறமும் நிறுத்துகின்றனர். கோயில் வளகத்தில், அலுவலக கட்டடத்தை தாண்டி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
இதற்காக "பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதையும் மீறி வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. கோயிலில் வெளி பிரகார கட்டுமான பணிகள் நடைபெறுவதால், தளவாடங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நடமாட உள்ள குறைந்த இடைவெளியில் வாகனங்கள் நிறுத்துவதால் சிரமம் ஏற்படுகிறது. ஆடி சனிக்கிழமை, சனிபெயர்ச்சி போன்ற திருவிழா நேரங்களில் ரூ.20 கட்டணத்தில் சிறப்பு தரிசன வரிசை செயல்படும். இதை பயன்படுத்தி மற்ற வாரங்களிலும் டிக்கெட் கொடுக்காமல் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் குச்சனூர் கோயிலுக்கு தனியாக நிர்வாக அலுவலர் நியமிக்கப்படாததால், இவ்வாறான முறைகேடுகள் தொடர்கின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதி செய்து தரவும், கட்டண முறைகேடுகளை தடுக்கவும் அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.