உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மலைக்கோவிலில் பாறைகள் தகர்ப்பு: வனவிலங்குகளுக்கு அபாயம்!

சதுரகிரி மலைக்கோவிலில் பாறைகள் தகர்ப்பு: வனவிலங்குகளுக்கு அபாயம்!

விருதுநகர்:சதுரகிரி மலைக்கோவிலில் கழிப்பறை கட்ட, வனப்பகுதியில் விதிகளுக்கு மாறாக, பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுவதால், வனவிலங்குகளுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. விருதுநகர், மதுரை மாவட்ட எல்லையில் உள்ளது சதுரகிரி மலை. இது, சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்திற்குட்பட்ட, அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. யானை, காட்டு மாடு, மான் உட்பட விலங்குகள் உள்ளன.இங்கு, சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோவில்கள், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை, ஆடி, தை அமாவாசை நாட்களில் மட்டும், இங்கு பக்தர்கள் வந்து வழிபட்டு சென்றனர்.

தற்போது அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சனி, ஞாயிற்று கிழமைகளிலும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு கழிப்பறை, தங்குமிடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், குளிக்கும் இடம் உட்பட வசதிகளை, 4.30 கோடி ரூபாயில் உருவாக்க, அறநிலையத் துறை முடிவு செய்து பணிகளை துவக்கி உள்ளது.இங்கு, வி.ஐ.பி., தங்கும் விடுதி உட்பட கட்டுமானப் பணிகள், இரு வாரங்களுக்கு முன் துவங்கியது. தற்போது, சந்தனமகாலிங்கம் கோவில் பகுதியில் கட்டடப்பணி நடந்து வருகிறது. தாணிப்பாறையிலிருந்து, 9 கி.மீ., துாரம் மணல், ஜல்லி, கற்களை தலைச்சுமையாக கொண்டு சென்று, கட்டடங் கள் கட்ட வேண்டும். ஆனால், சதுரகிரி வனப்பகுதியில் உள்ள சிறிய பாறைகளை வெடி வைத்து தகர்த்து, கற்களை எடுத்து கட்டுமானத்துக்கு பயன்படுத்துகின்றனர். வனப்பகுதி ஆற்றிலிருந்து மணல் எடுத்து கட்டடப் பணி நடக்கிறது.வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால், வன விலங்குகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. வனப்பகுதியையும், அங்குள்ள விலங்குகளையும் பாதிக்காமல் விதிமுறைகளுக்குட்பட்டு கட்டடங்கள் கட்ட, அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !