உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காற்றோட்டமான இடத்தில் பழநி கஸ்தூரிக்கு ஓய்வு!

காற்றோட்டமான இடத்தில் பழநி கஸ்தூரிக்கு ஓய்வு!

பழநி: பழநி கோயில் யானை கஸ்துாரி சில நாட்களாக பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு சிரமப்பட்டது. புத்துணர்வு அளிக்கும் வகையில் யானையின் இருப்பிடம் தற்காலிகமாக காற்றோட்டமான இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.பழநி ஞானதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 8 வயது முதல் கஸ்துாரி யானை பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் பங்குனி உத்திரம் வைகாசி விசாக விழாவில் கஸ்துாரி பங்கேற்கும்.மேலும் கந்தசஷ்டி விழாவின் போது மட்டும் யானைப்பாதை வழியாக மலையேறும் கஸ்துாரி அங்கு பக்தர்களுக்கு ஆசிவழங்குகிறது. கோவை மேட்டுப் பாளையத்தில் நடைபெறும் புத்துணர்வு முகாமின் போது மற்ற யானைகளுக்கு முன் உதாரணமாக செயல்பட்டு கஸ்துாரி பரிசு வாங்கியுள்ளது.

தற்போது 48 வயதான கஸ்துாரி சில நாட்களுக்கு முன் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டது. இதனால் வைகாசி விசாக விழாவில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. சிறப்பு சிகிச்சையளித்து வைகாசி விசாக தேரோட்ட விழாவில் கஸ்துாரி பங்கேற்று மேடான பகுதிகளில் தேரை நகர்த்த உதவியது.கஸ்துாரியை குதுாகலப் படுத்துவதற்காக கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையின்படி பழநி கோயிலுக்கு சொந்தமான காரமடை தோட்டத்தில் கரும்பு புல்வெளி தென்னை மரங்கள் நிறைந்த காற்றோட்டமான சூழ்நிலையில் காலை 8 முதல் மாலை 5 மணிவரை நடைபயிற்சி ஓய்வு எடுத்து வருகிறது.

கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில் “காரமடை தோட்டத்தில் யானையின் உணவுக்காக 40 சென்டில் கரும்புத் தோட்டம் 2 ஏக்கரில் பச்சைப்புல் வளர்க்கப்படுகிறது. யானையின் பாதவெடிப்புகள் குணமாகிவிட்டது. ஒரே இடத்தில் இருப்பதை விட அடிக்கடி இயற்கை சூழலுடன் உள்ள பகுதியில் ஓய்வு எடுக்கவேண்டும் என கால்நடை மருத்துவர் பரிந்துரைத்தனர். தற்போது காரமடை தோட்டத்திலும் அதன்பின் சண்முகநதிக்கரை பெரியாவுடையார் கோயில் வளாகத்திற்கும் யானை அழைத்துசெல்லப்பட உள்ளது”என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !