வனமாலீ ஈஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, உள்ள வனமாலீ ஈஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. செங்கல்பட்டு அடுத்த, ஈச்சங்கரனை கிராமத்தில், ஸ்ரீ பைரவர் ருத்ர கோவில் உள்ளது.
இக்கோவில் வளாகத்தில், புதியதாக, ஸ்ரீ வனமாலீ ஈஸ்வரர் கோவில் மற்றும் மணிமண்டபம் கட்டமுடிவு செய்யப்பட்டது. இக்கோவில் திருப்பணி கடந்த 2014ம் ஆண்டு துங்கி, கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பணிகள் முடிந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த 8ம் தேதி, கும்பாபிஷேக விழாவையொட்டி, விக்னேஷ்வர பூஜையுடன், முதல் கால யாக பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம், இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. காலை 6:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும், காலை 9:00 மணிக்கு, கலசங்கள் புறப்பட்டு, காலை 10:00 மணிக்கு, ஸ்ரீ வனமாலீ ஈஸ்வரர் மற்றும் மணி மண்டபத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை 10:30 மணிக்கு, பைரவர் சுவாமிக்கு மகா அபிஷேகமும், காலை 11:30 மணிக்கு, ஸ்ரீ வனமாலீ ஈஸ்வரர்க்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கினர். ஈச்சங்கரனையை சுற்றியுள்ள கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.