சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்!
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவில் 10 நாள் பிரம்மோற்சவ விழா 12.6.15 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. செஞ்சியை அடுத்த சிங்கவரம்மலைக்குன்றில் பிரசித்தி பெற்ற ரங்கநாதர் குடைவரை கோவில் 10 நாள் பிரம்மோற்சவ விழா, 12.6.15 காலை 8.30 மணிக்கு கருட கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதை முன்னிட்டு 12.6.15 முன்தினம் மாலை அங்குரார்பணமும், ரங்கநாதர், தாயாரம்மாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் செய்தனர்.12.6.15 காலை 8 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதர் கொடிமரத்தினருகே எழுந்தருளினார். தொடர்ந்து விசேஷ பூஜையுடன் 8.30 மணிக்கு கருட கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சூர்ய பிரபையில் சாமி ஊர்வலம் நடந்தது. 14.6.15 சிம்ம வாகனத்திலும், மூன்றாம் நாள் அனுமந்த வாகனத்திலும் நான்காம் நாள் சேஷவாகனத்திலும் சாமி வீதியுலா நடக்கிறது.முக்கிய விழாக்களில் ஒன்றான பெரிய திருவடி எனும் கருட சேவை 16ம் தேதி காலை நடக்க உள்ளது. மறுநாள் (17ம் தேதி) யானை வாகனத்தில் சாமி ஊர்வலமும், 18ம் தேதி காலை 8.30 மணிக்கு இந்த ஆண்டு புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.
12.6.15 ல் நடந்த விழாவில் ஊராட்சி தலைவர் ரங்கநாதன், தேர்திருப்பணிக்குழு உறுப்பினர்கள் குணசேகர், ஏழுமலை, இளங்கீர்த்தி, உபயதாரர்கள் திருஞானசம்மந்தம், வழக்கறிஞர் அண்ணாமலை, காமராஜ், ஸ்ரீராம் ரங்கராஜ், தேவராஜ், ஸ்ரீராமன், இந்து சமய அறநிலையத்துறை சண்முகம், குமார், கலந்து கொண்டனர்.பூஜைகளை குமார் பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்தனர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.தேனீக்கள்: உற்சவம் நடந்த இடத்தில் மிகப்பெரிய அரச மரம் உள்ளது. இதில் பெரிய அளவில் 6 மலைத்தேன் கூடுகள் உள்ளன. கொடியேற்றம் முடிந்து 9:00 மணிக்கு சாமி ஊர்வலம் புறப்பட தயாரான நேரத்தில், அரச மரத்தில் இருந்த கிளைகளை திடீரென குரங்குகள் சில உலுக்கின.இந்த கிளையில் இருந்த தேன் கூட்டில் இருந்து கிளம்பிய தேனிக்கள் பக்தர்களை சூழ்ந்து கொண்டு கொட்ட துவங்கியது, பக்தர்கள் அனைவரும் பல்வேறு திசைகளில் சிதறி ஓடியும் தேனீக்கள் துரத்தி கொட்டின. இதில் 25க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் செஞ்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர்.