உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை பார்த்தசாரதி கோவில் சம்ப்ரோட்சணம் கோலாகலம்!

சென்னை பார்த்தசாரதி கோவில் சம்ப்ரோட்சணம் கோலாகலம்!

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மகா சம்ப்ரோட்சணம், கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் 12.6.15 ல் சிறப்பாக நடந்தது. மகா விஷ்ணுவின், 108 தலங்களில் ஒன்றான, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், கடந்த ஜனவரி, 26ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு, கடந்த ஜூன், 5ம் தேதி திருப்பணிகள் முடிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, நேற்று சம்ப்ரோட்சணம் நடந்தது. அதையொட்டி, கடந்த, 8ம் தேதி யாகசாலை பூஜையும், முதல் கால ஹோமமும் நடந்தன. 12.6.15 அதிகாலை, 3:00மணிக்கு விசுவரூப தரிசனம், கும்பாராதனம், காலசந்தி நடந்தது. அதிகாலை, 4:30 மணிக்கு, 8வது கால ஹோமமும், திவ்ய பிரபந்த சேவையும் நடந்தன.

யாகசாலை பூஜை நிறைவடைந்ததும் காலை, 7:15 மணியளவில் கும்ப புறப்பாடு நடந்தது. மேள தாளத்துடன் புனித நீர் நிரப்பிய கும்பங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

காலை, 7:45 மணிக்கு ராஜகோபுரம், பார்த்தசாரதி, ஆண்டாள், வேதவல்லி தாயார், ரங்கநாதர், கோதண்டராமர், ராமானுஜர், மணவாள மாமுனிகள், ஆழ்வார், ஆச்சார்யார்கள் சன்னிதி விமானங்களின் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது.

காலை, 11:00 மணியளவில் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு, இலவச லட்டு, குங்கும பாக்கெட், கற்கண்டு, பெருமாள் படம் ஆகியவை வழங்கப்பட்டன.சம்ப்ரோட்சணத்தை ஒட்டி, ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின், மாலை, 6:00 மணிக்கு, வேதவல்லி தாயார், ரங்கநாதர் உள்புறப்பாடு, பார்த்தசாரதி, ஆண்டாள், உடையவர், மணவாள மாமுனிகள் வீதியுலா நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !