அமர்நாத்துக்கு 8வது குழு யாத்திரை!
ஜம்மு : அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்காக, எட்டாவது குழு நேற்று தனது யாத்திரையை தொடங்கியது. அங்கு பெய்து வரும் கனமழைக்கு பக்தர்கள் இரண்டு பேர் பலியாகினர். காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில், இமயமலையில், 13 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. இந்த குகையில், இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து திரும்புகின்றனர். பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்காக, நாடு முழுவதிலுமிருந்து 2.52 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 13ம் தேதி வரை அமர்நாத் புனித யாத்திரை நடக்கும். இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை, கடந்த 29ம் தேதி தொடங்கி, நடந்து வருகிறது. பனி, மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக யாத்திரை நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கியது. இந்நிலையில், அமர்நாத் புனித யாத்திரையின் எட்டாவது குழு நேற்று தனது பயணத்தைத் தொடங்கியது. இந்தக் குழுவில், 886 பெண்கள், 66 குழந்தைகள் உட்பட 3,183 பேர் இடம்பெற்றுள்ளனர். ஜம்முவில் பகவதி நகர் முகாமிலிருந்து இந்த குழு நேற்று காலை 5 மணியளவில் தனது பயணத்தைத் தொடங்கியது. பாகல்காம் மற்றும் பால்டால் ஆகிய இரண்டு வழிகளிலும் பக்தர்கள் தங்கள் பயணத்தை தொடர்கின்றனர். அக்குழு புறப்பட்ட சிறிது நேரத்தில், திடீரென கன மழை பெய்யத் தொடங்கியது. கனமழையின் காரணமாக, பாகல்காம் வழியாகச் சென்ற பக்தர்களின் பயணம் நிறுத்தப்பட்டது, அவர்கள் அங்குள்ள முகாம்களிலும், பாதுகாப்பான இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.