உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

தென்காசி : அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை மற்றும் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடந்தது. கேரள மாநிலம் அச்சன்கோவிலில் அரசன் ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயில் கருவறையில் உள்ள ஐயப்பன் சிலையை பரசுராமர் பிரதிஷ்டை செய்ததாக கோயில் வரலாறு கூறுகிறது. இந்த கோயிலில் கடந்த 1992ம் ஆண்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கோயில் வளாகத்தில் விநாயகர், முருகன், கன்னமூல கணபதி, கிருஷ்ணர், மாம்பழத்துறை பகவதியம்மன், நாகர் உள்ளிட்ட சன்னதிகள் சீரமைப்பிற்காக பாலாலயம் செய்யப்பட்டது. தற்போது சன்னதிகள் மறு சீரமைக்கப்பட்டன. இதனையடுத்து கடந்த 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் பிரதிஷ்டை மற்றும் அஷ்டபந்தன கும்பாபிஷேக நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து தினமும் கணபதி ஹோமம், கலசாபிஷேகம், அம்குர பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலையில் கணபதி ஹோமம், அம்குர பூஜை, தத்துவ ஹோமம், தத்துவ கலசம், கலசாபிஷேகம், 25 கலசம், மரப்பாணி, ஜீவகலச பூஜை, மதிய பூஜை, மாலையில் சயண பூஜை, கும்பேஷகக்கரி பூஜை, பிரம்ம கலச பூஜை, அதிவாஸ ஹோமம், அதிவாஸ பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கின. மரப்பாணி வாத்திய கோஷத்தோடு விநாயகர், முருகன், கன்னிமூல கணபதி, கிருஷ்ணர், மாம்பழத்துறை பகவதியம்மன், நாகர் திருவீதி எழுந்தருளல், பிரதிஷ்டை நடந்தது. இதன் பின்னர் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் "சாமியே சரணம் ஐயப்பா என சரண கோஷம் எழுப்பினர். செங்கனூர் தாழமன் மடம் தந்திரி கண்டரரு மோகனரரு, ராஜேஷ் நம்பூதிரி கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை நடத்தினர். கேரள மற்றும் தமிழகத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதியம் பூஜை நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருவாங்கூர் தேவசம் போர்டு உதவி கமிஷனர் சதீஷன் பிள்ளை, கோயில் நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், சென்னை ராமச்சந்திரன், கோவை வெங்கடேஷ், மும்பை நாராயணன், டில்லி கிருஷ்ணன், கூடலிங்கம் ஆறுமுகசாமி, தென்காசி குருசாமி நாடார், ஹரி, அச்சன்கோவில் மாஸ்டர் ராமச்சந்திரன் நாயர், சத்தீஷ் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !