உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள், சுகவனேஸ்வரர் கோவில் தேர்வீணாகுது! பாதுகாக்க சேலம் பக்தர்கள் கோரிக்கை!

பெருமாள், சுகவனேஸ்வரர் கோவில் தேர்வீணாகுது! பாதுகாக்க சேலம் பக்தர்கள் கோரிக்கை!

சேலம்: சேலம், ராஜகணபதி கோவிலின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, சுகவனேஸ்வரர்,
பெருமாள் கோவில்களின் தேர்கள் பழுதாகி விட்ட நிலையில், அவற்றை பாதுகாக்க கோவில்
நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், மழை, வெயிலால் தேர் வீணாகிறது.

சேலம், கடை வீதியில் ராஜகணபதி கோவிலின் அருகில், சுகவனேஸ்வரர், பெருமாள் கோவிலின் தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுகவனேஸ்வரர் கோவில் தேர் பழுதாகியதால், நடப்பாண்டு தேரோட்டத்தில் பங்கு கொள்ள முடியாமல் ஓரங்கட்டப்பட்டு விட்டது.

பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்த நிலையில், தேரில் இருந்து பாகங்கள் கழன்று விழுந்து பக்தர்கள் காயம் அடைந்ததால், பாதியிலேயே தேர் நிலையை அடைந்தது. பொதுவாக இந்த இரண்டு கோவில்களின் தேரோட்டம் முடியும் நிலையில், கோவில் நிர்வாகம் இரண்டு தேர்களையும், பலகை, தகரத்தை கொண்டு மறைப்பை ஏற்படுத்துவது வழக்கம். இதனால், தேர்கள் மழை, வெயிலின் பாதிப்பில் இருந்து தப்பின.

சுகவனேஸ்வரர் கோவில் தேர் பழுதாகி விட்டதால், தேரை, கோவில் வளாகத்துக்கு எடுத்து வந்து, பக்தர்கள் பார்த்து ரசிக்கவும், தரிசிக்கும் வகையில், கண்ணாடி கூண்டு மூலம் தேரை பாதுகாக்க, 10 லட்சம் ரூபாயில் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு, துறையின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெருமாள் கோவில் தேரிலும் பழுது நீக்கும் பணி மேற் கொள்ள முடிவு செய்யப்பட்டு அதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளது. இரண்டு தேரையும் அடுத்த ஆண்டு தேரோட்டத்தில் பயன்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.

தேர்களில் நடத்த வேண்டிய பணிகள் குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இரண்டு
கோவில் நிர்வாகங்களும், தேரை வழக்கம் போல், மறைப்பு (மூடாமல்) செய்யாமல் அப்படியே
விட்டு விட்டன.இதனால், தேர் வெயில், மழையின் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. அது
மட்டுமின்றி, அடுத்த ஆண்டு தேர் பயன்படுத்த முடியாதது என்பதால், தேரில் உள்ள
பொம்மைகளை பொதுமக்கள் எடுத்துச் செல்லவும் துவங்கி விட்டனர்.

இரண்டு கோவில்களின் தேர்களும் முழுமையாக வீணாகி விடும் முன், அந்தந்த கோவில்
நிர்வாகம், கோவில்களுக்கே எடுத்து வந்து தேர்களை பாதுகாக்க வேண்டும். தற்காலிமாக
தேர்களை மர பலகைகள், தகடுகளை கொண்டு மூடி பாதுகாக்க வேண்டும். என பக்தர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஒருவர் கூறியதாவது: சுகவனேஸ்வரர்,
பெருமாள் கோவில்களின் தேர்களை அடுத்த ஆண்டு தேரோட்டத்தில் பயன்படுத்த முடியாத
நிலை ஏற்பட்டு விட்டது. தேர்களை பாதுகாக்க முடிவு செய்துள்ளோம். இது குறித்து, அரசுக்கும், உயரதிகாரிகளுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.இதனால், விரைவில் உயர் அதிகாரிகள் தேர்களை ஆய்வு நடத்துவர் என்பதால், தேரை நடப்பாண்டு மூடாமல், திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் அதிகாரிகள் ஆய்வுக்கு பின் தேர் அந்த இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றவும், பணிகளை மேற்கொள்வது குறித்தும் முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !