அகோபிலமடம் ஜீயருக்கு இன்று சஷ்டியப்த பூர்த்தி!
திருச்சி: அகோபிலமடம், 46வது பட்டம் ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் ஜீயர் எனப்படும்
அழகிய சிங்கர் சுவாமிகளின் பிறந்த நாள், ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில்
கொண்டாடப்படுகிறது.
அதன்படி, இந்தாண்டு இன்று, (22ம் தேதி) சுவாமிகளின், 60வது பிறந்தநாள் என்பதால், சஷ்டியப்த பூர்த்தியை விமர்சையாக கொண்டாட மடத்து சீடர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்காக, சென்னையில் முகாமிட்டிருந்த ஜீயர் கடந்த, 8ம் தேதி ஸ்ரீரங்கம் வந்தார். வடக்குவாசல் தசாவதாரர் சன்னதியில் தங்கியுள்ள அழகியசிங்கர் ஜீயர் சுவாமிகள், தினமும் நித்ய ஆராதன மூர்த்தியான மாலோல நரசிம்மருக்கு சிறப்பு
திருவாதாரதனங்கள் நடத்தியதோடு, பக்தர்களுக்கு அருளாசியும் வழங்கினார். கடந்த இரண்டு
நாட்களுக்கு முன், தமிழக கவர்னர் ரோசய்யா, ஜீயரை சந்தித்து ஆசி பெற்றுச் சென்றார்.
விழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் கீழஉத்தர வீதி அகோபிலமடம் மற்றும் வடக்கு வாசல்
தசாவதாரர் சன்னதி ஆகிய இடங்களில் வேத, பிரபந்த பாராயணங்கள் நடைபெற்றன. தினமும்
மாலையில், ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.