உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் தேரோட்டம் கொடியேற்றத்துடன் துவக்கம்!

நெல்லையப்பர் தேரோட்டம் கொடியேற்றத்துடன் துவக்கம்!

திருநெல்வேலி: நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா இன்று திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 30ஆம் தேதி நடக்கிறது. திருநெல்வேலியின் நடுநாயகமாக விளங்கும் நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு முழுவதும் 12 மாதங்களும் 12 திருவிழாக்கள் நடக்கின்றன. பிரம்மோத்சவ விழாவான ஆனித்தேரோட்டம் பிரசித்திபெற்றதாகும். தமிழகத்தின் மிகப்பெரிய தேரினை கொண்ட சிவாலயமாகும். இந்த ஆண்டு ஆனித்தேரோட்ட விழா இன்று திங்கள்கிழமை காலை காலை 6.32-க்கு மேல் 7.02-க்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது.

நெல்லையப்பர் சுவாமி சன்னதியின், நந்திமுன்பாக அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்ற வைபவம் நடந்தது. கோயில் சிவாச்சாரியார்கள், பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. இரவு 7 மணிக்கு சுவாமியும் அம்மனும் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது. ஆனித்திருவிழா பத்து நாட்கள் நடக்கும் விழாவாகும். தினமும் மாலையில் சுவாமி, அம்பாள், வீதிஉலா நடக்கும். முக்கிய விழாவான 9ம் நாள் திருவிழாவான தேரோட்டம் ஜூன் 30ல் நடக்கிறது. அன்று அதிகாலை 3.40 மணிக்கு மேல் 4.10 மணிக்குள் சுவாமியும் அம்மனும் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 8.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் வைபவம் நடைபெறுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு அன்றைய தினம் திருநெல்வேலி, பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !