ஆடிப் பண்டிகையில் அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதில் சிக்கல்!
சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலின் வெளிப்பிரகாரம் இடிக்கப்பட்டுள்ள நிலையில், மகா மண்டபம், அர்த்த மண்டபத்திலும் பணி நடைபெற இருப்பதால், ஆடிப் பண்டிகையின் போது பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் விழாக்கள் தொடர்ந்து தடை படுவது, பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலின் வெளிப்பிரகார சுவர், மேற் கூரை ஸ்திரத்தன்மை இழந்ததை அடுத்து, கடந்த மாதம் வெளிப்பிரகாரம் இடிக்கப்பட்டு, தற்போது பணி நடந்து வருகிறது. இந்நிலையில், மகா மண்டபம், அர்த்த மண்டபத்தை பரிசோதித்து, அறிக்கையை தாக்கல் செய்ய, தொல் பொருள் துறைக்கு கோவில் நிர்வாகம் வேண்டு கோள் விடுத்துள்ளது.
தொல்பொருள் துறையினர் இந்த வாரத்தில் ஆய்வு மேற் கொள்ள உள்ளனர். இந்த ஆய்வின் முடிவை பொறுத்து, மகா மண்டபம், அர்த்த மண்டபத்தை இடிக்கும் பணி துவங்கும் என, தெரிகிறது. கட்டுமான பணிகளை அடுத்து, கோவிலின் பின் பக்க பகுதிகள், அலுவலகத்தை ஒட்டிய பகுதிகள் வெளியாட்களின் நடமாட்டத்துக்கு தடை செய்யப்பட்டு, மறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், கோட்டை மாரியம்மன் கோவிலின் பிரசித்தி பெற்ற ஆடிப் பண்டிகை, ஜூலை மூன்றாவது வாரத்தில் துவங்குகிறது. இந்த பண்டிகையின் போது, கோவிலுக்கு அதிக அளவில் கூட்டம் வரும் என, எதிர்பார்க்கப்படும் நிலையில், கட்டுமான பணிகளால் ஆடிப்பண்டிகை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.கோவில் நிர்வாகம் ஆடிப் பண்டிகையை நடத்த முடிவு செய்து அதற்கான பணிகளை துவக்கி உள்ளது. பண்டிகை திட்டமிட்டபடி நடக்கும் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, ஆடிப் பண்டிகைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கோவிலின் நிர்வாக அதிகாரி உமாதேவி கூறியதாவது:கோவிலின் கருவறையில் பணி நடந்து, பாலாலயம் மேற் கொண்டால் மட்டுமே பண்டிகை நடத்த முடியாது. தற்போது, கருவறையில் எவ்வித மாற்றமும் செய்யப்பட வில்லை. அதே நேரத்தில் வெளிப்பிரகாரம், அர்த்த, மகா மண்டபங்களில் மட்டுமே பணி நடக்கிறது. இதனால், ஆடிப் பண்டிகை திட்டமிட்டபடி நடத்தப்படும்.கோட்டை மாரியம்மன் கோவிலின் ஆடிப் பண்டிகை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டில் கோவிலில் பணி நடந்து வரும் நிலையில், பண்டிகை வருகிறது. கோவில் வளாகத்தில் போதுமான இடவசதி இல்லை.இதனால், பக்தர்கள் பொங்கல் வைத்தல், உருளுதண்டம் போன்றவற்றை குறைத்துக் கொள்ளலாம். நேர்த்திக்கடன் செலுத்த கோவில் நிர்வாகம் ஒரு போதும் தடை விதித்தது இல்லை. அதே நேரத்தில், பொதுமக்களும், பக்தர்களும், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, கோவில் நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.அடுத்த ஆண்டு கட்டுமான பணிகளை முடித்து பெரிய அளவில் கும்பாபிஷேகத்தை நடத்தி, ஆடிப் பண்டிகையை பிரம்மாண்டமாக கொண்டாட அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படும். பக்தர்கள் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, நடப்பாண்டு பண்டிகையில் நேர்த்திக் கடன் செலுத்துவதை குறைத்து கொள்வது நல்லது.இவ்வாறு, அவர் கூறினார்.கோவில் வளாகத்தில் கட்டுமான பணி நடப்பதால், நடப்பாண்டில் ஆடிப் பண்டிகையில், பொங்கல் வைத்தல், உருளுதண்டம், பிரசாதங்களை வழங்குதல் ஆகியவற்றுக்கு போதிய இடவசதி இல்லாததால், நேர்த்திக் கடன் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பது, பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.