உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை கோவிலில் அலங்கார ரூபத்தில் நடராஜர் வீதி உலா!

தி.மலை கோவிலில் அலங்கார ரூபத்தில் நடராஜர் வீதி உலா!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடந்த, ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு, அலங்கார ரூபத்தில், நடராஜர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மார்கழி திருவாதிரையில், அருணோதய கால பூஜை, மாசி வளர்பிறை சதுர்த்தியில் சந்திகால பூஜை, சித்திரை திருவோணத்தில் நண்பகல் பூஜை, ஆனி உத்திரத்தில் சாயரட்சை பூஜை, ஆவணி வளர்பிறை சதுர்த்தி மற்றும் புரட்டாசி வளர்பிறை சதுர்த்திகளில் அர்த்தஜாம பூஜை ஆகியவை நடராஜருக்கு மிகவும் உகந்தது. அதன்படி, அண்ணாமலையார் கோவிலில் எழுந்தருளியுள்ள, நடராஜருக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனமும் சிறப்புக்குரியது. ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று, சாய ரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்வது தான் ஆனி திருமஞ்சனம். அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேற்று, காலை ஆனி திருமஞ்சன திருவிழா விமர்சையாக நடந்தது. இதையொட்டி நேற்று, முன்தினம் இரவு, 8 மணி அளவில் அண்ணாமலையார் ஆயிரங்கால் மண்டபத்தில், சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, அதிகாலை நடராஜருக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும், 16 வகையான தீபங்களால் தீபாரதனையும் நடந்தது. பின்னர், அலங்கார ரூபத்தில் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜர் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !