ராமேஸ்வரம் கோயிலில் நாயன்மார்களின் சிலைகள் சுத்தம் செய்யும் பணி துவக்கம்
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பச்சை படர்ந்து சேதமடையும் நிலையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள நாயன்மார்களின் ஐம்பொன் சிலைகளை சுத்தம் செய்யும் பணி துவங்கியது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் முதல் பிரகாரம் சுவாமி சன்னதியில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிலைகள் உள்ளன. 300 ஆண்டுகள் பழமையான இந்த ஐம்பொன் சிலைகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்தன. சிலைகளின் மீது பாசம் படர்ந்து பொலிவு இழந்து காணப்பட்டன. கோயில் நிர்வாகம் இதில் மெத்தனம் காட்டி வந்தது.இதையடுத்து ராமேஸ்வரம் கோயில் சிலைகள் சேதமடைந்தும், பராமரிப்பின்றி இருப்பதாக சேவார்த்திகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து சேதமடைந்த சுவாமி சிலைகளையும், சுவாமி உலா வாகனங்கள், தங்கம், வெள்ளி ரதங்களை சீர் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பல ஆண்டுகளாக கம்பிக்கதவுகளுக்குள் அடைபட்டுக்கிடந்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிலைகளை பொலிவடைய செய்யும் பணியை நேற்று துவக்கினர். சில நாட்களில் இந்த பணிகள் முடியும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.