சின்மய ஜோதி யாத்திரை இன்று கோவை வருகை!
கோவை:சுவாமி சின்மயானந்தரின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, சின்மயா மிஷன் சார்பில், நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும், ஜோதி யாத்திரை இன்று கோவை வருகிறது. பகவத் கீதையை நாடு முழுவதும் பரப்பியவரும், விடுதலை போராட்ட வீரருமான சுவாமி சின்மயானந்தரின் நுாற்றாண்டு விழா, மே 8ல் எர்ணாகுளத்தில் துவங்கியது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் துவக்கி வைத்தார். அதில், சுவாமி சின்மயானந்தரின் வாழ்க்கை சரித்திரத்தை குறிக்கும், தேடலை நோக்கி எனும் திரைப்படம், 250 காட்சிகள் காண்பிக்கப்பட்டது. மேலும், 151 நகரங்களுக்கு, 238 நாட்கள் பயணிக்கும் சின்மய ஜோதி யாத்திரை, இன்று மாலை 6:30 மணிக்கு கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளிக்கு வருகிறது. கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் விழாவை துவக்கி வைக்க, சுதேசி ஜாக்ரன் மஞ்ச் தலைவர் குருமூர்த்தி தலைமை வகிக்கிறார். சுவாமி விமலானந்தா, சின்மயா மிஷன் கோவை, ஆச்சார்யர் பங்கேற்றவுள்ளனர். பகவத் கீதையின், 15வது அத்தியாயத்தை பாராயணம் செய்யும் வகையில், 6,000 குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சி, நவஇந்தியா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நாளை காலை 10:30 மணிக்கு துவங்குகிறது. தொடர்ந்து, குருதேவருக்கு அர்ப்பணம் எனும் தலைப்பில் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி மாலை 6:30 மணிக்கு நடக்கிறது. பண்டித் ரமேஷ் குல்கர்னியின் இந்துஸ்தானி இசை நிகழ்ச்சியும் உண்டு. அதேசமயம், ஜூன் 27ல் மல்லாடி சகோதரர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது.