திருமலையில் குவிந்தனர் பக்தர்கள்!
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க, லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். திருமலையில் வெள்ளியன்று, குறைந்த அளவு பக்தர்களே காணப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு, இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் வைகுண்டம் இடது காம்பளக்சின் 31 வளாகங்களும் நிரம்பிய நிலையில், கோவிலுக்கு வெளியேயும் பக்தர்களின் வரிசை, நீண்ட நேரம் வரை இருந்ததைக் காண முடிந்தது. இரு நாட்களில், 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் திருமலைக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நேற்று பிற்பகல் நிலவரப்படி, இலவச தரிசனத்திற்கு 10 மணி நேரமும், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனத்திற்கு 3 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகள் அறிவிப்பு செய்துள்ளனர்.பக்தர்களின் துரித வசதிக்காக, தொலைதூர தரிசனம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. தங்கும் விடுதி கிடைக்காத பக்தர்கள் வழக்கம் போல் விடுதி வளாகங்கள், சாலை ஓரங்களில் ஓய்வெடுத்து வருகின்றனர். முடி காணிக்கை செலுத்தவும், இலவச அன்னதான உணவு சாப்பிடவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. வார விடுமுறையால் கூட்டம் அதிகரித்துள்ளது.