மங்களாம்பிகா உடனுறை மருதவனேஸ்வரசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ஒரத்தநாடு தாலுகா நெய்வேலி கிராமத்தில் உள்ள ஸ்ரீ மங்களாம்பிகா உடனுறை மருதவனேஸ்வர சுவாமி (அய்யனார்) கோவிலில் மகா கும்பாபிஷேகம் 100 ஆண்டுக்கு பின் நேற்று கோலாகலமாக நடந்தது.ஒரத்தநாடு தாலுகா நெய்வேலியில் நீண்டகாலத்துக்கு முன் சேர, சோழ, பாண்டிய அரசாட்சிக் காலத்தில் தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பிரத்யஷிமூர்த்தியாய், திருமணநாதர் இவர்களுக்கு மத்தியில் தில்லையம்பல ஸ்தலமாய் விளங்கிய இக்கோவில் நேற்று காலை 10 மணியளவில் பெருஞ்சாந்தி திருக்குட நன்னீராட்டு விழா கோலாகலமாக நடந்தது.நேற்று முன்தினம் காலை சிறப்பு யாகசாலை பூஜைகளும், யாத்திர தானம் பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 10 மணியளவில் ஸ்ரீமங்களாம்பிகா உடனுறை மருதவனேஸ்வரா சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் செய்து பின் 10.30 மணியளவில் மூலவர் சுவாமிக்கு திருக்குட நன்னீராட்டுதல் விழா கோ லாகலமாக நடந்தது. கும்பாபிஷேகத்தின் போது பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் மங்களா ம்பிகா உடனுறை மருதவனேஸ்வர சுவாமி அருள்பாலித்தார்.திருமண பாக்யம், குழந்தை பாக்யம், வியாபாரம் வளம் பெறுதல் போன்ற நேத்திக்கடன்களுக்கு இத்திருத்தலத்ததில் வேண்டினால் உடனே காரியங்கள் நிறைவேறும். அய்யனார் குதிரையில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இக்கும்பாபிஷேக விழா 100 ஆண்டுக்கு பின் நடப்பது மேலும் சிறப்பு வாய்ந்ததாகும். விழாவில், புதுக்கோட்டை, தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, ஆலங்குடி, வடகாடு, கறம்பக்குடி பிற பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.விழாவை முன்னிட்டு சிறப்பு பஸ் வசதிகள் மற்றும் கறம்பக்குடி, ஒரத்தநாடு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை முதல் மாலை வரை தொடர் அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை நெய்வேலி மற்றும் இதர பகுதி பொதுமக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.