திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முப்பழ பூஜை!
ADDED :3996 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா நிறைவாக நேற்று முப்பழ பூஜை நடந்தது.இக்கோயிலில் ஜூன் 22ல் துவங்கிய திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ஆஸ்தான மண்டபத்தை வலம் வந்து, திருவாட்சி மண்டப ஊஞ்சலில் எழுந்தருளினர்.நேற்று உச்சிகால பூஜையில் மூலவர்கள் கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு மா, பலா, வாழை படைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை சுவாமி யானை மண்டபத்தில் எழுந்தருளினார்.மூன்று ஆண்டுகளாக யானை இல்லாத நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் யானை தெய்வானை வந்தது. இதனால் யானைக்கு பூஜைகள் நடந்தன. தீபாராதனை முடிந்து சிம்மாசனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.