உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வந்தான் கருப்பன் விளையாட ..

வந்தான் கருப்பன் விளையாட ..

வந்தான் கருப்பன் விளையாட
வாளில் ஏறி நின்றாட
வந்தான் கருப்பன் விளையாட
வாளில் ஏறி நின்றாட

வாளும் வேலும் விளையாட
வாளில் ஏறி நின்றாட
சுக்கு மாந்தடி சுழன்றாட
வந்தான் கருப்பன் விளையாட

காலில் சலங்கை கலகலக்க
கையில் வாளும் பளபளக்க
முறுக்கு மீசை துடி துடிக்க
வந்தான் கருப்பன் விளையாட

பாலும் சோறும் கமகமக்க
பள்ளயம் இங்கே ஜொலி ஜொலிக்க
பிள்ளைகள் நாங்கள் கொண்டாட
வந்தான் கருப்பன் விளையாட

சந்தனக் கருப்பன் தானாட
சங்கிலிக் கருப்பன் உடனாட
பதினெட்டாம் படி கருப்பனுமே
வந்தான் இங்கே விளையாட

முன்னோடியுமே ஓடிவர
நொண்டியும் இங்கே ஆடிவர
பதினெட்டாம் படி கருப்பனுமே
வந்தான் இங்கே விளையாட

கொராட்டி எனும் ஓர் ஆலயமாம்
கூடி இருப்பவன் சாஸ்தாவாம்
தங்கையும் அங்கே அருகிருக்க
தரணியைக் காக்க வந்தவனாம்

வந்தான் விளையாட

பட்டாடைகளும் பளபளக்க
பரிகளிரண்டும் துடிதுடிக்க
பாவங்கள் போக்கிட கருப்பனுமே
பறந்தே வந்தான் விளையாட

அலங்காரங்களும் ஜொலி ஜொலிக்க
ஆலயம் வண்ணங்கள் மினுமினுக்க
திருப்புத்தூர் நகர் கருப்பனுமே
தினமும் வந்தான் விளையாட

கண்களில் தீப்பொறி பறபறக்க
கைகளில் பிரம்புகள் சுழன்றாட
வெள்ளைக் குதிரையின் மேலேறி
விரைந்தே வந்தான் விளையாட

சின்னவர் அருகே சிரித்திருக்க
முத்துவும் முறுவல் பூத்திருக்க
சொத்தாம் கோட்டைக் கருப்பனுமே
சுகமாய் வந்தான் விளையாட

சுக்கு மாந்தடி சுழன்றாட
சூழும் பேய்கள் சுழன்றறோட
கோமகன் கோட்டைக் கருப்பனுமே
குதித்தே வந்தான் விளையாட

சங்கிலி பின்னல்கள் சலசலக்க
சலங்கைகள் காலினில் ஒலிஒலிக்க
சங்கிலிக் கருப்பனும் இன்றிங்கே
சரியாய் வந்தான் விளையாட


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !