பாடலீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி பரிகார யாகம்!
கடலூர்: கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் குரு தட்சணாமூர்த்திக்கு பரிகார யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. நவக்கிரகங்களில் ஒன்றான குரு தட்சணாமூர்த்தி கடக ராசியில் இருந்து கடந்த 5ம் தேதி இரவு 11:02 மணிக்கு சிம்ம ராசிக்கு இடம் பெயர்ந்தார். குரு பெயர்ச்சியைத் தொடர்ந்து முதல் வியாழக் கிழமையான நேற்று முன்தினம் மாலை கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரர் கோவிலில் பரிகார யாகம் நடந்தது. அதனையொட்டி கோவில் சங்கு மண்டபத்தில் மாலை 6:00 மணிக்கு கலசம் வைத்து பூஜை நடந்தது. தொடர்ந்து 96 வகையான மூலிகைப் பொருட்கள், பழ வகைகள், நவதானியங்கள், பாதாம் உள்ளிட்ட பருப்புகள் மற்றும் அன்ன ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் தட்சணாமூர்த்திக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பூர்ணாகுதியைத் தொடர்ந்து கலச தீபாராதனை, யாத்ரா தானத்தையடுத்து, புனித நீர் அடங்கிய கலசம் புறப்பாடாகி தட்சணாமூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. யாகம் மற்றும் பூஜைகளை நாகராஜ குருக்கள் நடத்தினார். பரிகார யாகத்தில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் ரத்தினாம்பாள் மற்றும் உபயதாரர்கள் பங்கேற்றனர்