மரத்தில் அம்மன் உருவம்: பக்தர்கள் கூடுவதால் பரவசம்!
அந்தியூர்: அந்தியூர் அடுத்த வேம்பத்தியில் உள்ள சொக்கநாச்சி அம்மன் கோவிலில், இரவு நேரத்தில் கோவில் எதிரில் உள்ள அரச மரத்தில் ஒளி வடிவில், அம்மன் காட்சி கொடுப்பதாக, கடந்த, நான்கு நாட்களாக அப்பகுதி மிகுந்த பரபரப்பாக உள்ளது. அந்தியூரில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் மெயின் ரோட்டில், வேம்பத்தி பஸ் ஸ்டாப் அருகே, நூறாண்டு பழமையான சொக்கநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை தினத்தில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். அந்தியூர், தவிட்டுப்பாளையம், பிரம்மதேசம், வெள்ளையம்பாளையம், பருவாச்சி, ஆப்பக்கூடல், சந்தியபாளையம் உட்பட பல்வேறு பகுதியில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்வர். இக்கோவிலுக்கு எதிரில் உள்ள அரச மரத்தில், அம்மன் ஒளி வடிவில் காட்சி தருவதாக கூறி, கடந்த, நான்கு நாட்களாக தினமும், நூற்றுக்கணக்கானோர், பல்வேறு பகுதியில் இருந்தும் வந்து, பார்த்தும், தரிசனம் செய்தும் செல்கின்றனர். இரவு, 7 மணிக்கு வரத்துவங்கும் கூட்டம், நள்ளிரவு, 12 மணி வரை நீடிக்கிறது. நேற்று முன்தினம் மாலை, 3 மணிக்கு கோவிலில், சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. பின், சொக்கநாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.ஆப்பக்கூடல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.