தன்வந்திரி பீடத்தில் மஹா மண்டபம் விழாவில் கவர்னர் ரோசையா பங்கேற்பு
வேலூர்: வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில், மஹா மண்டபம் கட்டுவதற்காக, கவர்னர் ரோசையா அடிக்கல் நாட்டினார். வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. கோவில் முன்பாக, 20 லட்சம் ரூபாய் செலவில் மஹா மண்டபம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. தன்வந்திரி பீடம் முரளிதர ஸ்வாமிகள் தலைமை வகித்தார். தமிழக கவர்னர் ரோசையா, மஹா மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்து, பூமி பூஜை செய்தார். பின்னர், சங்கு ஸ்தாபன பூஜை, கன்னிகா பரமேஸ்வரி ஹோமம், வாஸ்து ஹோமம், சூக்த ஹோமம், பூர்ணாஹூதியில், கவர்னர் ரோசையா பங்கேற்றார். பின்னர், அவர் பேசியதாவது:இங்கு நான், கவர்னராக வரவில்லை. பக்தனாக வந்தேன். தன்வந்திரி பீடத்தின் மூலம், நிறைய தர்மகாரியங்கள் செய்கின்றனர். முரளிதர ஸ்வாமிகளுக்கு, ஆண்டவன் நிறைய உடல் பலத்தை கொடுத்து, மேலும் பல, தர்ம காரியங்கள் செய்ய வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.தன்வந்திரி பீடத்திற்கு வந்த கவர்னர் ரோசையாவை, கலெக்டர் நந்தகோபால், எஸ்.பி., செந்தில்குமாரி ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். விழாவில், தொழில் அதிபர்கள் சங்கர் ராவ், சேஷாத்திரி, பல்லவன் குழுமத் தலைவர் போஸ், ஆற்காடு மகா லட்சுமி நர்சிங் கல்லூரி தலைவர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.