உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி!

சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி!

வத்திராயிருப்பு: சதுரகிரி மலைக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை உத்தரவு தெரியாமல் நேற்று விடுமுறைநாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் மலையடிவாரத்தில் குவிந்தனர். மதுரை கலெக்டர் சுப்பிரமணியன் சிறப்பு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, அவர்கள் மலை கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட சதுரகிரிமலையில் சுந்தர மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. மே 17 ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். வெள்ளத்தை கடக்க முயன்ற ஒன்பது பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக இரு மாதங்களுக்கு மலைக்கு பக்தர்கள் செல்ல மதுரை கலெக்டர் சுப்பிரமணியன் தடை விதித்தார். அதேநேரத்தில் முக்கிய நிகழ்வான அமாவாசை, பவுர்ணமியையொட்டி மட்டும் தலா மூன்று நாட்கள் செல்ல அனுமதி வழங்கினார்.

இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் விஷயம் தெரியாமல் பலபகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்தபடி உள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் காலையில் ஏராளமானோர் மலையடிவாரத்தில் குவிந்தனர். சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, காஞ்சிபுரம் என நீண்ட தொலைவிலிருந்து வந்திருப்பதால் தங்களை மலை கோயிலுக்கு செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்தினர். வனத்துறையினர் மறுத்தனர். பக்தர்கள் எண்ணிக்கை கூடியதால் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அனுமதிகேட்டு பக்தர்கள் போலீசார், வனத்துறையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து மதுரை, விருதுநகர் மாவட்ட போலீசார் மதுரை கலெக்டர் சுப்பிரமணியனிடம் பேசி சிறப்பு அனுமதி பெற்று தந்தனர். இதன்பின் பக்தர்கள் காலை 11 மணிக்கு சுவாமி தரிசனத்திற்காக மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனுமதி பெற சிலமணி நேரம் ஆனதால் காத்திருந்தவர்களின் பலர் ஏமாற்றத்துடன் ஊருக்கு புறப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !