உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லை காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு: திரளான பெண்கள் பங்கேற்றனர்!

நெல்லை காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு: திரளான பெண்கள் பங்கேற்றனர்!

திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான காந்திமதி அம்பாள் வளைகாப்பு வைபவம் நேற்று நடந்தது. நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவும் கடந்த 11ஆம் தேதி அம்மன் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. ஆடிப்பூர விழா வரும் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாள்களில் தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவில் வீதி உலாவும் நடைபெறுகிறது. விழாவின் 4-ஆம் நாளான நேற்று செவ்வாய்கிழமை, காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் சிறப்பாக நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. தொடர்ந்து அம்பாள் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். பகல் 12 மணிவாக்கில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு வளைகாப்பு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது. இந்த வளைகாப்பு வைபவத்தில் திரளான பெண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பிரசாதமாக வளையல்கள் வழங்கப்பட்டது. இரவில் காந்திமதி அம்பாள், சன்னதியிலிருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் இரவு 8 மணிக்கு திருநெல்வேலி நகரின் நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா சென்று மீண்டும் திருக்கோயிலை வந்து சேரும் நிகழ்ச்சி நடந்தது.ஆடிப்பூரத் திருவிழாவின் 10-ஆம் நாளான வரும் 20ஆம் தேதி இரவு ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூர முளைக்கட்டுத் திருவிழா நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !