வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் வருஷாபிஷேகம்: கலையரங்கம் திறப்பு!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் வருஷாபிஷேகம் நேற்று 1008 சங்காபிஷேகத்துடன் நடந்தது. தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் (டி.வி.ஆர்.) நினைவாக கலையரங்கம் திறக்கப்பட்டது.வடிவீஸ்வரம் அழகம்மன் சுந்தரேஸ்வரர் கோயில் பழமையானது. இங்கு கடந்த ஆண்டு ஆனி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோயிலின் தெற்கு வாயிலில் ராஜகோபுரம் நிறுவப்பட்டு அதற்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த ராஜகோபுரம் தினமலர் நாளிதழ் சார்பில் உபயமாக கட்டி கொடுக்கப்பட்டது.இதன் வருஷாபிஷேக விழா நேற்று அதிகாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் நடந்தன. 1008 சங்காபிஷேகம் நடந்தது. சங்குகளில் புனித நீர் நிறைக்கப்பட்டு அது சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அழகம்மனுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கலசாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.விழாக்குழு சார்பில் கலையரங்கம் கட்டப்பட்டு அதற்கு தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் பெயர் சூட்டப்பட்டது. திறப்பு விழா விழாக்குழு செயலாளர்கள் சீனு என்ற சீனிவாசன், நாகராஜன் தலைமையில் நடந்தது. தலைவர் ஐயாமணி அய்யர் கலையரங்கத்தை திறந்து வைத்தார். நாகர்கோவில் நகராட்சி தலைவி மீனாதேவ் குத்து விளக்கேற்றினார். பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ராமசேஷன், மகாதேவன், சுப்பிரமணியம், பொருளாளர் சங்கர் பேசினார்கள். சிவதாணு நன்றி கூறினார்.விழாவில் பேசியவர்கள், வடிவீஸ்வரம் கிராமத்தில் பிறந்து, தினமலர் நாளிதழை தொடங்கி, குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய நடந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து சமூக தொண்டாற்றியவர் டி.வி.ராமசுப்பையர் என்று குறிப்பிட்டனர்.