ரமலான் சிந்தனைகள்: நலமும் வளமும் பெறுவோம்!
"தர்மம் செய்வதன் மூலம் மகிழ்ச்சியைத் தரும் ரம்ஜான் பண்டிகையை நாமெல்லாம் கோலாகலமாகக் கொண்டாடுகிறோம். நோன்பிருந்து அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்ததன் மூலம், அவனிடம் இருந்து கருணையைப் பரிசாகப் பெற்றுக் கொண்டோம். சுவனத்தின் (சொர்க்கம்) பாதையை வலுப்படுத்தி உள்ளோம். பசியின் கொடுமையை உணர்ந்து, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற பெரிய தத்துவத்தை உணர்ந்து இருக்கிறோம். ரமலான் நாளில், நோன்பை முடித்து, உண்டு களித்து மகிழ்ச்சியுடன் இருக்க மார்க்கம் அனுமதித்திருக்கிறது. அதற்காக, வரம்பு மீறி செயல்பட்டு விடக்கூடாது. பெருநாளுக்கு ஆடம்பரமாக ஆடை அணிவதையும் நபிகளார் ஆதரிக்கவில்லை. உமர் (ரலி), நபிகளாரிடம் ஒரு பெருநாளன்று, ஒரு பட்டாடையைக் கொண்டு வந்து தந்த போது, "நிச்சயமாக இது பாக்கியமற்றவர்களின் ஆடையாகும்,” என்றார்.எனவே, எளிமையான சுத்தமான ஆடைகளை அணிந்தாலே போதும். நாயகத்தின் அறிவுரைப்படி, நோன்பு பெருநாள் தர்மத்தை, தொழுகைக்கு முன்னரே கொடுத்து விட வேண்டும். ஆண்களும், பெண்களும் நோன்புப் பெருநாள் தொழுகையில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். நலத்தையும் வளத்தையும் இறைவனிடம் வேண்டுவோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 மணி.