சேலத்தில் மாரியம்மன் கோவில்களில் ஆடி பண்டிகை
சேலம்: சேலத்தில் மாரியம்மன் கோவில்களில் ஆடி பண்டிகை துவங்கி உள்ள நிலையில், அரசு பொருட்காட்சி நடத்தும் வகையில், அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.சேலம் மாவட்டத்தில், மாரியம்மன் கோவில்களின் ஆடிப் பண்டிகை ஜூலை, மூன்றாவது வாரத்தில் துவங்கும். எட்டுப்பட்டி மாரியம்மன்களில் தலைவியாக விளங்கும் கோட்டை மாரியம்மன் கோவில் பண்டிகைக்கான பூச்சாட்டுதல் நாளிலேயே பிற கோவில்களிலும் பூச்சாட்டப்பட்டு, ஜூலை நான்காவது வாரம் முதல், ஆகஸ்ட் முதல் வாரம் வரை, சேலமே விழாக்கோலம் பூண்டு இருப்பது வழக்கம்.கடந்த பல ஆண்டுகளாக, ஆடிப் பண்டிகைக்கு பின்பே அரசு பொருட்காட்சி துவங்கியது. இதனால், ஆடிப் பண்டிகையை காண வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அது மட்டுமின்றி, அரசு பொருட்காட்சியின் வருவாயிலும் சரிவு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில், நடப்பாண்டில், சேலம் மாரியம்மன் கோவில்களின் ஆடிப் பண்டிகை ஜூலை, 21ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. பொங்கல், உருளுதண்டம் ஆகியவை, ஆக., 4, 5 ஆகிய நாளில் நடக்கிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான, ஆக., 5 பொங்கல் நாளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.ஆடிப் பண்டிகை நாளில் பொருட்காட்சியை செயல்பாட்டுக்கு கொண்டு வர, சேலம் செய்தி துறை அதிகாரிகள் தீவிர முயற்சி மேற் கொண்டு வருகின்றனர். ஜூலை, 26ல் பொருட்காட்சியை துவக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதில், அரசின், 48 துறைகள், அதன் உட்பிரிவுகள் சார்பில், அரங்கம் அமைப்பதற்கான அனைத்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நடப்பாண்டு, அரசுப் பொருட்காட்சி, ஆடிப் பண்டிகை நாட்களில் துவங்குவதால், அதிக அளவில் வருவாய் அரசுக்கு கிடைக்கும் என்பதோடு, கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால், பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்வது குறித்தும் போலீஸ் அதிகாரிகள், தீவிர ஆலோசனை மேற் கொண்டு வருகின்றனர்.